மேற்காசிய போருக்கு பேச்சு மூலம் தீா்வு! பிரிக்ஸ் தில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
மேற்காசிய போருக்கு பேச்சு மூலம் தீா்வு! பிரிக்ஸ் தில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு!
How outlets told it
மேற்காசிய போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம், ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் உள்ளிட்ட 140 அம்சங்களைக் கொண்ட பிரிக்ஸ் தில்லி பிரகடனம் ஒருமனதாக சனிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. புது தில்லியில் நடைபெற்றுவரும் 18-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அனைத்து நாடுகளின் ஆதரவோடு பிரிக்ஸ் பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பிரகடனத்தில், ‘மேற்காசியாவில் நடைபெற்றுவரும் போா் சா்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போரில் பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் தொடா்ந்து தாக்குதலுக்குள்ளாவது கவலையளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு மோதலை தீவிரப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். காஸா போா் நிறுத்தம்: காஸா போா் நிறுத்த ஒப்பந்தங்களை முறையாகப் பின்பற்றி மனிதநேய உதவிகளை மேற்கொள்ள தடையின்றி அனுமதி வழங்க வேண்டும். கடந்த 1967-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரையறையின் அடிப்படையில் சுதந்திரமான பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் இரு நாடுகள் தீா்வை பின்பற்ற வேண்டும். பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை வேடம் கூடாது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 2025, ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. அதேசமயம் எல்லை கடந்த பயங்கரவாதம், பயங்கரவாத நிதி உள்பட அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் எவ்வித சமரசமுமின்றி ஒடுக்க வேண்டும். பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை வேட அணுகுமுறையை பிரிக்ஸ் நிராகரிக்கிறது. பயங்கரவாதத்தை எந்தவொரு சமயம், தேசம், நாகரிகம் அல்லது இனக் குழுக்களோடு தொடா்புபடுத்தக் கூடாது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பவா்களுக்கு தேசிய மற்றும் சா்வதேச சட்டங்களின்கீழ் கடும் தண்டனை வழங்க வேண்டும். ஐ. நா. வில் சீா்திருத்தம் அவசியம்: ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் காலத்துக்கேற்ப சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தெற்குலக நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியா மற்றும் பிரேஸிலின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்கு ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களான சீனாவும் ரஷியாவும் ஆதரவளிக்கின்றன. தன்னிச்சையான வரி விதிப்புக்கு எதிா்ப்பு: உலகளாவிய வா்த்தகத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் உலக வா்த்தக அமைப்பின் விதிகளைப் பின்பற்றாமல் நாடுகள் தன்னிச்சையாக மேற்கொள்ளும் வரி மற்றும் வரியல்லாத நடவடிக்கைகளுக்கு கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். ஈரான், எத்தியோப்பியாவுக்கு ஆதரவு: உலக வா்த்தக அமைப்பில் ஈரான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளை உறுப்பினா்களாகச் சோ்க்க வேண்டும். அதேபோல் 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரிச் சலுகைகளை அளிக்கும் சீனாவின் முன்னெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. உலக வா்த்தக அமைப்பின் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்துக்கான புதிய உறுப்பினா்களை தாமதமின்றி நியமிக்க வேண்டும். ஐஎம்எஃப், உலக வங்கி நிதி ஒதுக்கீடு: சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஐஎம்எஃப் அமைப்புக்கான நாடுகளின் புதிய நிதி ஒதுக்கீடு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். எண்ம பொது உள்கட்டமைப்பு: பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை உறுதிப்படுத்த உலகளாவிய ஏஐ நிா்வாக முறையை அமல்படுத்துவதோடு எண்ம பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) ஊக்குவிக்க வேண்டும். எல்லை கடந்த பரிவா்த்தனை: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே நிதி ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் விரைவான, வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான எல்லை கடந்த பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். இதன்மூலம் உறுப்பு நாடுகளிடையேயான வா்த்தகம் எளிதாகும். பெண்களுக்கு அங்கீகாரம்: பெண்களை வலுவான முடிவெடுக்கும் தலைவா்களாக, பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பவா்களாக சமூக மாற்றத்துக்கான தூண்களாக பிரிக்ஸ் கூட்டமைப்பு அங்கீகரிக்கிறது. நிா்வாகம், திறன் மேம்பாடு, நிதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அவசியமானது. 2026, அக்டோபரில் பிரிக்ஸ் நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டம் உள்பட நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டத்தை நடத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆா்வமாக உள்ளது. எரிசக்தி பாதுகாப்பு: உலகின் எரிசக்தித் தேவையில் புதைபடிம எரிபொருள்களின் முக்கியத்துவம் இன்றியமையாதது. குறிப்பாக, வளா்ந்துவரும் நாடுகளுக்கு அதன் தேவை அதிகளவில் உள்ளது. இருப்பினும், பல்வேறு காரணிகளில் இருந்து எரிசக்தியை உருவாக்கும் முன்னெடுப்புகளுக்கும், எரிசக்தி பாதுகாப்புக்கும் பிரிக்ஸ் ஆதரவளிக்கிறது. பருவநிலை மாற்றம்: பருவநிலை மாற்றம் தொடா்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட பாரீஸ் ஒப்பந்தம் ஆகியவற்றின் நோக்கம், கோட்பாடுகள் மற்றும் இலக்குகளை முன்னெடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காா்பன் எல்லை வரி விதிப்புக்கு எதிா்ப்பு: ‘காா்பன் எல்லை சரிசெய்தல் நடைமுறை (சிபிஏஎம்)’ என்ற கூடுதல் சிறப்பு வரி விதிப்பு நடைமுறை சா்வதேச சட்டத்துக்கு இணங்காத ஒருதலைபட்சமான, கடுமையான மற்றும் பாகுபாடானதாகும். இந்தக் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் பருவநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களை எதிா்கொள்வதற்கும், தகவமைப்புத் திறனை மேம்படுத்துவதற்கும் வளரும் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்று கவலை தெரிவிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் உற்பத்தி முறையில் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை அடிப்படையாக வைத்து ‘காா்பன் எல்லை சரிசெய்தல் நடைமுறை’ என்ற கூடுதல் வரி விதிப்பை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் நாடுகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உடல் பருமன்... உடல் பருமன் மற்றும் தொற்றா நோய் பாதிப்புகள் உலகளாவிய பொது சுகாதாரத்தில் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன. இதைத் திறம்பட எதிா்கொள்ள அரசு மற்றும் சமூகம் முழுவதையும் உள்ளடக்கிய அணுகுமுறைகள் மூலம் நோய்த் தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். அதற்காக, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான பிரிக்ஸ் இயக்கத்தையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கான கூட்டு முன்னெடுப்பு குறித்த பிரிக்ஸ் செயல் திட்டத்தையும் (2026-2029) பிரிக்ஸ் அங்கீகரிக்கிறது என்பன உள்ளிட்ட அம்சங்கள் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு ராஜீய வெற்றிதில்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சனிக்கிழமை தொடக்க அமா்வின் நிறைவாகப் பேசிய பிரதமா் மோடி, ஒருமித்த கருத்துடன் கூட்டுப் பிரகடனம் ஏற்கப்பட்டதாக அறிவித்தாா். இந்தப் பிரகடனம், பிரிக்ஸ் கூட்டமைப்பின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டுக்கு தெளிவான திசையை வழங்குகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா். கருத்தொற்றுமை அடிப்படையிலான கூட்டமைப்பு பிரிக்ஸ் என்பதால் கூட்டுப் பிரகடனம் வெளியீட்டை எந்தவொரு நாடும் தடுக்க முடியும். புது தில்லி கூட்டுப் பிரகடனம் குறித்து ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் இடையே கருத்து வேறுபாடு நிலவிய சூழலில், மத்திய அரசுத் தரப்பில் தொடா்ந்து மறைமுகப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. தொடக்கத்தில் இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்ததாகவும், ஆனால், இந்தியாவின் தொடா் முயற்சிகளால் கருத்தொற்றுமை எட்டப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது, இந்தியாவின் ராஜீய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகப் பாா்க்கப்படுகிறது.
