காஞ்சியில் கொத்தடிமை கொடுமை மரக்கடையில் சிறைவைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிரசவித்து பலி..! மரக்கடை உரிமையாளர் ஓட்டம்
Read at Polimer NewsCrime and courts · 1 outlet covered this
காஞ்சியில் கொத்தடிமை கொடுமை மரக்கடையில் சிறைவைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிரசவித்து பலி..! மரக்கடை உரிமையாளர் ஓட்டம்
How outlets told it

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாத கர்ப்பிணியான தேன்மொழி, தன் கணவருடன் அரக்கோணம் சாலையில் ‘வெள்ளை கேட்’ அருகே இயங்கி வரும் மரக்கடையில் கொத்தடிமையாக வேலை வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கடையின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுக் கொண்டு கடந்த 6 மாதங்களாகத் அங்கங்கே தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்ததாகவும், இவர்களுடன் முத்து - காவியா என்ற மற்றொரு தம்பதியும் இங்கு தங்கி வேலை செய்து வந்தனர். பழங்குடிகளான இருளர் சமுதயத்தை சேர்ந்த இந்த இரு தம்பதியரையும் மரக்கடை உரிமையாளர் கொத்தடிமை போல வேலை வங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அலறியடித்த தம்பதியினர், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்குமாறு கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம் கெஞ்சியதாகவும், ஆனால், அவரோ "தன்னிடம் வாங்கிய முன் பணத்தை கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தில் இருந்து செல்லக் கூடாது" எனக் கூறி, அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்து மரக்கடைக்குள் உள்ள கூடாரத்திற்குள் சிறைவைத்ததாகக் கூறப்படுகிறது. பிரசவ வலியால் துடித்த தேன்மொழிக்கு மருத்துவ உதவி கிடைக்காததால், அவரது அலறல் சத்தத்துக்கு இடையே, அவர்கல் சிறைவைக்கப்பட்டிருந்த கூடாரத்திலேயே அவரது பச்சிளம் குழந்தை வெளியே வர தொடங்கியது . குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், தீவிர வலி மற்றும் ரத்தப்போக்கால் துடித்த தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். புதன் கிழமை மாலை 4.00 மணியளவில் அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், இந்தச் சம்பவத்தை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது என்றும், பிரசவம் நடந்ததை மறைக்க வேண்டும் என்றும் கூறி மிரட்டியதோடு படிப்பறிவில்லாததை பயன்படுத்தி அந்த இருளர் குடும்பத்தினரிடம் வெறும் 2,000 ரூபாய் பணத்தைக் கொடுத்து, உடலோடு சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. தேன்மொழியின் சடலம் இருளர் குடியிருப்புக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் , அவரது உடலில் இருந்து பாதி அளவு வெளியே வந்த நிலையில் குழந்தையின் சடலமும் உடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருளர் சமுதாய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இக்கொடுமையான சம்பவம் குறித்து பொன்னேரிகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, 20 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பாமல் , கொத்தடிமையாக சிறை வைத்து உயிரைப் பறித்த மரக்கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம் தலைமைறைவாகி விட்டார். இந்த கொடுமையான சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், ஆனந்தனின் புகார் தொடர்பாக BNSS பிரிவு 194-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்றும் தேன்மொழியின் கணவர் ஆனந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, தானும் தனது குடும்பத்தினரும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி தனியாக ஒரு புகார் அளித்துள்ளதால், காவல்துறை மற்றும் சார் ஆட்சியரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
