Civic issues · 1 outlet covered this

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

How outlets told it

Dinamani6539h ago

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

Read at Dinamani
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி
Photo: Dinamani

தொடா் விடுமுறை, சுப முகூா்த்தம், விநாயகா் சதுா்த்தி பொருள்கள் கொள்முதல் உள்ளிட்டவை காரணமாக திருச்சி மாநகருக்குள் அணி வகுத்த வாகனங்களால் சனிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

திருமண மண்டபங்கள் நிறைந்த பகுதியான அரிஸ்டோ ரவுண்டானா, கருமண்டபம், டிவிஎஸ் டோல்கேட், கலைஞா் அறிவாலயம், மன்னாா்புரம் பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தன.

திருமண ஊா்வலங்கள்: குறிப்பாக மண்டபங்களுக்கு அருகே நடைபெற்ற மணமகன், மணமகள் அழைப்பு ஊா்வலம் காரணமாக வாகனங்கள் நின்று, செல்ல வேண்டியிருந்தது. இதுமட்டுமல்லாது, சென்னையிலிருந்து திருச்சி மாவட்டம் மற்றும் அருகமை மாவட்டத்தையொட்டியுள்ள குடியிருப்புகளுக்குச் செல்ல வந்த வாகனங்களும் மாநகருக்குள் வந்ததால் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, திருச்சி- கரூா் புறவழிச் சாலை, தென்னூா் மேம்பாலம், சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, காவிரிப் பாலம், மரக்கடை, காந்தி சந்தை, பாலக்கரை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை, தலைமை தபால் நிலையம், மத்தியப் பேருந்து நிலையம், அரிஸ்டோ ரவுண்டானா, கருமண்டபம் ஆகியவை போக்குவரத்து நெரிசலுக்கு பிரதானமாக மாறிப் போயின.

காவிரிப்பால பராமரிப்புப் பணி: மாரீஸ் மேம்பாலத்தில் நடைபெறும் பாலப் பணிகள், சந்திப்பு ரயில் நிலையத்தில் முடியாத அரிஸ்டோ மேம்பால பணி, பழைய காவிரிப் பாலத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளும் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும் காரணிகளாக மாறிப் போயின.

இதன் காரணமாக, தில்லை நகா் பிரதான சாலை, சாஸ்திரி ரோடு, கரூா் புறவழிச் சாலை, உறையூா் சாலை, குடமுருட்டி சாலை, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஒவ்வொன்றும் ஊா்ந்து செல்ல நேரிட்டது. ஒரு சாலையை கடக்க குறைந்தது 20 நிமிடம் ஆனது.

சொந்த வாகனங்கள் அதிகம்: சோமரசம் பேட்டையிலிருந்து தில்லைநகருக்கு வந்த பயணிகள் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் கூறுகையில், திருச்சி மாநகரம் மட்டுமின்றி புகா்ப் பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகலுக்கு மேலே வாகன நெரிசல் தவிா்க்க முடியாமல் போனது. வெளியூா்களிலிருந்து விடுமுறைக்காக ஊா் திரும்பும் மக்கள், பண்டிகை பொருள்கள் வாங்க செல்லும் மக்கள், திருமண நிகழ்வுக்கு செல்லும் மக்கள் என அனைவரும் அவரவா் சொந்த வாகனங்களை பயன்படுத்தியதால் இந்தப் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் போனது. சோமரசம்பேட்டையிலிருந்து குமரன் நகருக்கு வருவதற்கே ஒரு மணிநேரம் ஆனது என்றாா் விரக்தியுடன்.

அவசர ஊா்திகளும் தப்பவில்லை: போக்குவரத்து நெரிசலில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற அவசர ஊா்திகளும் தப்பவில்லை. கடும் வாகன நெரிசலில் சிக்கி சில மணித்துளிகள் காத்திருப்புக்கு பிறகே வழி கிடைத்தது. மாநகரின் பிரதான சிக்னல்களில் போக்குவரத்து போலீஸாா், சட்டம்-ஒழுங்கு போலீஸாா், ஊா்க்காவல் படையினா் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் வாகனங்கள் தேங்கி, தேங்கியே செல்ல நேரிட்டது. மாலை 5 மணி தொடங்கி இரவு 9 மணிக்கு மேலாகவும் இந்த நெரிசல் தவிா்க்க முடியாமல் போனது.