அச்சு ஊடகம் ஆற்றலை இழக்கும் நிலை இன்னும் 25 ஆண்டுகளுக்கு இல்லை: எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு
Read at Dinamalar1 outlet covered this
அச்சு ஊடகம் ஆற்றலை இழக்கும் நிலை இன்னும் 25 ஆண்டுகளுக்கு இல்லை: எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு
How outlets told it

'அச்சு ஊடகம் தன்னுடைய ஆற்றலை இழப்பதற்கான வாய்ப்பு, அடுத்த, 25 ஆண்டுகளுக்கு என் கண்ணிற்குப் படவில்லை,'' என, எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.'தினமலர்' நாளிதழின் பவள விழாவில், அவர் பேசியதாவது:தமிழகம் முழுக்க இன்று விரிந்து பரந்திருந்தாலும் கூட, 'தினமலர்' குமரி மாவட்டத்தவர்களின் இதழ்; அங்கிருந்து முளைத்தது. எங்களுக்கு அதில் ஒரு பெருமை எப்போதுமே உண்டு. நீண்ட காலத்திற்கு முன், ஒருங்கிணைந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே அது தொடங்கியது; அங்கிருந்து வளர்ந்து, இன்று தமிழகம் முழுக்க பரவியிருக்கும், ஒரு பெரிய நிறுவனமாக மாறியிருக்கிறது. மாபெரும் நினைவுச்சின்னம் இரண்டாவதாக, இன்னொன்றுக்கான காரணம் உண்டு. என்னுடைய ஆசிரியர் சுந்தர ராமசாமியுடன் பல வகையிலும் தொடர்புடைது 'தினமலர்!' சுந்தர ராமசாமியினுடைய அம்மா ஒரு வகையில், 'தினமலர்' நிறுவனருக்குத் தங்கை முறையானவர். குமரி மாவட்டத்தின் உருவாக்கத்தில், தினமலருக்கு இருக்கும் மிகப்பெரிய பங்கு உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதைப் போன்ற ஒன்று, வையாபுரி பிள்ளையால் தொடங்கி வைக்கப்பட்ட இதழ் இது. இந்தியாவிலேயே ஒரு வட்டார மொழியின், முதல் கலைக்களஞ்சியம், தமிழில், பெரியசாமித் துாரனால் தொடங்கப்பட்டது. முதல் பேரகராதி, அனைத்துச் சொற்களும் அடங்கிய பேரகராதி, வையாபுரி பிள்ளை தலைமையில், மாணவர்களின் உழைப்பில் உருவானது. முதல் பேரகராதி உருவான பின், எத்தனை அகராதிகளை வேண்டுமானாலும் அதில் இருந்து உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், முதல் கலைக்களஞ்சியம், முதல் பேரகராதி என்பது ஒரு சாதாரணப் பணியல்ல; ஒரு மகத்தான வாழ்க்கைப் பணி. வையாபுரி பிள்ளைக்கு இன்னும் 200, 300, 500 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய மாபெரும் நினைவுச் சின்னமாக, 'தினமலர்' இருந்து வருகிறது. இந்த விழாவுக்கு நான் வருவதைப் பற்றி, 'தி இந்து' ஆங்கில இதழில் பணியாற்றும் கோலப்பன் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு நிகழ்வை அவர் சொன்னார். அது வி. ஏ. சுப்பிரமணியம் சொன்னது... வி. ஏ. சுப்பிரமணியம் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது, ராமசுப்பையர் அவ்வழியாகச் சென்றார். 'என்ன ராமசுப்பு... எங்க போயிட்டு வர்றீங்க?' என்று கேட்டதற்கு, 'வயலெல்லாம் வித்துட்டேன் மாமா' என்றிருக்கிறார். 'அடப்பாவி... எதுக்கு எல்லா வயலையும் வித்தே?' என கேட்டதும், 'நான் நாளிதழ் ஆரம்பிக்கப் போறேன்' என்றிருக்கிறார். எல்லா வயல்களையும் ஒட்டுமொத்தமாக விற்று, ஒரே கிரையத்திலே மொத்த நிலங்களையும் விற்று ஆரம்பிக்கப்பட்ட இதழ் என, வி. ஏ. சுப்பிரமணியம் சொன்னார். இப்படி சொன்னார் கோலப்பன். அந்தக் காலகட்டத்தில், அது சாதாரணமான ஒரு முடிவு அல்ல. ஏனென்றால், பத்திரிகை என்பது ஒரு வணிகமாக அன்று இல்லை; அது ஒரு சேவைதான். 1950, 60-களுக்குப் பின்தான், அச்சுத்தொழில் லாபகரமான ஒன்றாக மாறத் தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்னரே ஒரு தொழிலாக அன்றி, ஒரு தேசப் பணியாக, அதாவது தன் மனதுக்கு பிடித்த ஒரு அறிவிப்புப் பணியாக, அதைத் தொடங்கிய ராமசுப்பையரின் நினைவு, இந்நாளில் போற்றப்பட வேண்டும்; ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகிறேன். அதை இங்கே குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இணைய ஊடகமாக மாறின கடந்த, 25 ஆண்டுகளாக, அச்சு ஊடகங்களின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது, அந்த மாதிரி நிலைமை இருக்கிறது. இணையம், அது மிகப்பெரிய ஊடகமாகி விட்டது. கிட்டத்தட்ட எல்லா ஊடகமுமே, இணைய ஊடகமாக மாறி விட்டன. கடந்த, 2009-ல் அமெரிக்கா செல்லும்போது, அமெரிக்காவினுடைய ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும், கட்டுக்கட்டாக நாளிதழ்கள் வைக்கப்பட்டிருக்கும்; இலவச நாளிதழ்கள். யார் வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம், படிக்கலாம். ஒரு நாளிதழ், 60 முதல் 70 பக்கங்கள் இருக்கும். பெரும்பாலும் இலவசம் தான். இலவசமாக எப்படித் தருகின்றனர் என்றால், விளம்பரங்களை வைத்து தான். இப்போது 2026-ல் மறுபடியும் செல்லும்போது ஒன்றை கவனிக்கிறேன்... மீண்டும் இதழ்களுடைய காலம் வந்திருக்கிறது. மீண்டும் அச்சு இதழ்கள் அதிகமாகப் படிக்கப்படுகின்றன. மீண்டும் அச்சு நுால்கள் விற்பனையாகின்றன. அச்சு நுால் திரும்பி வந்து விட்டது; அச்சு என்பது ஒரு ஆவணமாக இருக்கிறது. அடுத்தகட்ட வாசிப்பு, முழுக்கவே இணைய வழியாக வாங்கிப் படிக்கக் கூடியதாக இருக்கிறது. அச்சு ஊடகம், எந்த வகையிலும் இல்லாமல் ஆகவில்லை. உடனடியாக அது இல்லாமல் ஆவதற்கான தடயங்களும், அமெரிக்காவிலேயே கிடையாது. நமக்குத் தெரியும், அமெரிக்காவில் எதுவோ அதுதான், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா!எனவே, அச்சு ஊடகம் தன்னுடைய ஆற்றலை இழப்பதற்கான வாய்ப்பு, ஒரு ஆய்வாளன் என்ற வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு என் கண்ணிற்குப் படவில்லை. இன்று இந்த நாளிதழ்களுக்கு என்ன இடம் இருக்கிறதோ, அது இருக்கும். ஆனால், கேளிக்கை சார்ந்த வார இதழ்கள் நீடிக்காது; கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் இடம் மறையும். செய்திக்கான ஊடகங்களின் எண்ணிக்கை, மதிப்பு கூடத்தான் செய்யும். எப்போது செய்திக்குக் கீழே ஒரு கையெழுத்து இல்லையோ, அது செய்தியே கிடையாது. எப்போது செய்திக்குக் கீழே ஒரு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையோ, அப்போது அது செய்தியே கிடையாது; அது வதந்திதான். கவனிக்கப்பட்ட ஒரு சிற்றிதழ் 'தினமலர்' சாதித்தது என்ன என்ற வரலாற்றை, இப்போது பார்த்தீர்கள் என்றால், குமரி மாவட்டப் பிரிவினைக் காலகட்டத்திலே கவனிக்கப்பட்ட ஒரு சிற்றிதழ், அதன்பின் ஒரு நாளிதழாக மாறி, மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுக்க பரவி வந்திருக்கிறது. அனைத்துமே கிடைக்கக்கூடிய ஒரு இதழாக, கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது, அது சாதித்த விஷயம் என்று நினைக்கிறேன். ஒரு நாளிதழ் தொடர்ச்சியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையான சுவாரஸ்யத் தன்மையை உருவாக்க வேண்டியிருக்கிறது. அந்த சுவாரஸ்யத் தன்மை வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அது அடைந்த ஒரு வெற்றி, சாதனை... அது பெருக வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வாசகர்களுக்கு, தேவையான, விருப்பமான செய்திகளை அனுப்பும் நிலை அடுத்த, 30 ஆண்டுகளில் வரலாம். இதுபோன்ற செய்திகளை அளிக்கும் நிறுவனமாகவும், 'தினமலர்' வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.