சூறையாடப்பட்ட சவுக்கு சங்கர் வீடு... பின்னணியில் செல்வப்பெருந்தகை?!
Read at Vikatan1 outlet covered this
சூறையாடப்பட்ட சவுக்கு சங்கர் வீடு... பின்னணியில் செல்வப்பெருந்தகை?!
How outlets told it

பல தருணங்களில், எல்லைமீறி அவதூறு கருத்துகளைப் பேசுவதாக சவுக்கு சங்கர் மீது விமர்சனங்கள் எழுவதுண்டு. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டுக் கதவுகளை உடைத்து, வீடு முழுக்க மலம் கலந்த கழிவுநீரைச் சிலர் கொட்டியதும், சங்கரின் தாயாரை அவர்கள் ஆபாசமாகத் திட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியல் கட்சியினர் பலரும், இதற்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். ‘இந்தச் சம்பவத்தின் பின்னணியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பு இருப்பதாக’ பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் சவுக்கு சங்கர். என்னதான் நடந்தது..? விசாரித்தோம்!சூறையாடப்பட்ட சவுக்கு சங்கர் வீடுவீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர்!2010-ம் ஆண்டு முதல், `சவுக்கு’ என்கிற பெயரில் புலனாய்வு இணையச் செய்தித்தளத்தைத் தொடங்கி நடத்திவருகிறார் சங்கர். அதிரடியான கேள்விகளையும் விமர்சனங்களையும் தயங்காமல் முன்வைக்கும் சங்கர், செப்டம்பர் 2023-லிருந்து ஒரு மீடியா நிறுவனத்தையும் தொடங்கி நடத்திவருகிறார். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 24-ம் தேதி, அவரது வீட்டைத் தூய்மைப் பணியாளர்களின் உடையணிந்த சுமார் 30 பேர் முற்றுகையிட்டனர். `தூய்மைப் பணியாளர்களை சவுக்கு சங்கர் அவமதித்துவிட்டார்’ என்கிற முழக்கத்தோடு, அவரது வீட்டைச் சூறையாடியபடி, சுமார் 80 லிட்டர் மலம் கலந்த நீரை அவரது வீடு முழுவதும் ஊற்றி நாசம் செய்திருக்கிறார்கள். தனியாக இருந்த அவருடைய 70 வயது தாயாரை அச்சுறுத்தியதோடு, `வீட்டைக் கொளுத்திவிடுவோம்’ என்று மிரட்டியுமிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பாகியிருக்கும் நிலையில், ‘இதன் பின்னணியில் சில முக்கியப் புள்ளிகள் இருக்கி றார்கள்’ என்கிறார்கள் சங்கர் தரப்பினர். இது குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர்கள் சிலர், “கடந்த ஆண்டு, டிசம்பர் 9-ம் தேதி, சவுக்கு சங்கரின் யூடியூப் தளத்தில், ‘தூய்மைப் பணியாளர்களுக்காக அரசு வழங்கும் மானியத்தை, தனது பினாமி நிறுவனங்கள் மூலமாக செல்வப்பெருந்தகை கொள்ளையடிக்கிறார்’ என்ற செய்தி வீடியோ வடிவில் வெளியானது. அந்த வீடியோவில், ‘இந்தத் திட்டத்தின் மூலமாகத் தனக்கு வேண்டியவர்களை செல்வப்பெருந்தகை, பயனாளியாக்கியிருக்கிறார்’ என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்தார் சவுக்கு சங்கர். அதோடு, ‘தூய்மை பணியாளர்கள் மது அருந்திவிட்டுத் தூங்குகிறார்கள்’ என்று வீடியோவில் சங்கர் வார்த்தையை விட்டதாகவும் சர்ச்சையானது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அவதூறு வழக்கும் பதிவானது. அந்த வழக்கு விசாரணைக்கு சமீபத்தில் ஆஜராகிவிட்டு வந்த சவுக்கு சங்கர், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் செல்வப்பெருந்தகைக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு செல்வப்பெருந்தகை தரப்பிலிருந்து, ‘தன் மைத்துனரான சசிகாந்த் செந்திலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கத்தான் சவுக்கு சங்கர் இப்படியெல்லாம் அவதூறு கிளப்புகிறார்’ எனக் கொதித்தார்கள். இந்த வார்த்தைப்போருக்கு இடையேதான் சவுக்கு சங்கரின் இல்லம் தாக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள். சவுக்கு சங்கர்காவல்துறை எப்படி அனுமதித்தது?இந்தத் தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய சவுக்கு சங்கர், “முதலில் தூய்மைப் பணியாளர்களை நான் அவமதித்தேன் என்பதில் துளியும் உண்மையில்லை. நான் செய்யாத ஒரு தவறுக்காக, எனது இல்லம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அனுமதி பெறாமல் துண்டறிக்கை கொடுக்க முற்பட்டாலே குண்டுக்கட்டாகக் கைதுசெய்கிறது காவல்துறை. ஆனால், 30-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் வந்திறங்கி, கையில் மலம் கலந்த நீருடன் பூந்தமல்லி - சென்னை சென்ட்ரல் சாலையில் பேரணியாக நடந்து வந்து என் வீட்டைத் தாக்கியிருக்கிறார்கள். இதைக் காவல்துறை எப்படி அனுமதித்தது..?குறிப்பாக, இந்த மொத்தக் கும்பலையும் வழிநடத்தியது செல்வப்பெருந்தகையின் தீவிர ஆதரவாளரான வாணி ஜெயக்குமார் என்பவர்தான். அந்தப் பெண்மணி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று, தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்த விவரத்தை போலீஸாரிடமே தெரிவிக்கிறார். தாக்குதல் நடத்தியபோது, அதை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார்கள். நான் புகாரளித்து 40 நிமிடங்கள் கழித்துத்தான் இரண்டு போலீஸார் வீட்டுக்கு வந்துசேர்ந்தனர். கலவரம் செய்தவர்களைக் கைதுசெய்யாமல், தொடர்ந்து கோஷம் எழுப்ப அனுமதித்தது போலீஸ். இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. வெறும் சி. எஸ். ஆர் போட்டுவிட்டு, வழக்கு பதிவுசெய்யாமல் இருப்பதிலிருந்தே சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்” என்றார் ஆதங்கமாக. செல்வப்பெருந்தகைசவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, “சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்தை நானும் கண்டிக்கிறேன். அதேசமயம், அவருடைய குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள், காங்கிரஸ் உறுப்பினர் என்றால் அவர் அதை நிரூபிக்கட்டும். அவருக்கு வேண்டியவரை காங்கிரஸ் மாநிலத் தலைவராக்கவே சவுக்கு சங்கர் இவ்வாறு செய்கிறார்” என்றார். பல தருணங்களில், எல்லைமீறி அவதூறு கருத்துகளைப் பேசுவதாக சவுக்கு சங்கர் மீது விமர்சனங்கள் எழுவதுண்டு. அதற்காக, `போராட்டம்’ என்கிற பெயரில், அவரது இல்லத்தைச் சூறையாடி, மலம் கலந்த கழிவுநீரை வீடு முழுக்க ஊற்றியிருப்பதெல்லாம் கண்டிக்கத்தக்கது. சம்பவத்தின்போது சிசிடிவி-யில் பதிவான காட்சிகளையெல்லாம் காவல்துறை அழித்துவிட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், சி. பி. சி. ஐ. டி விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண். அதன்படி, சி. பி. சி. ஐ. டி விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களை ஜாமீனில் விடுவித்திருக்கிறது நீதிமன்றம். கருத்து, கருத்தால் மட்டுமே எதிர்கொள்ளப்பட வேண்டும். பேச்சு, எழுத்து, வெளிப்பாட்டுச் சுதந்திரம் அரசால் காக்கப்பட வேண்டும்!
