Crime and courts · 1 outlet covered this

திமுக பாக அமைப்பாளரை வெட்டிச்சாய்த்த பண வெறி இளைஞரணி பிரமுகர் கைது..! எஸ்.ஐ. சட்டையை பிடித்த தாய்..!

How outlets told it

Polimer News1003d ago

திமுக பாக அமைப்பாளரை வெட்டிச்சாய்த்த பண வெறி இளைஞரணி பிரமுகர் கைது..! எஸ்.ஐ. சட்டையை பிடித்த தாய்..!

Read at Polimer News
திமுக பாக அமைப்பாளரை வெட்டிச்சாய்த்த பண வெறி இளைஞரணி பிரமுகர் கைது..! எஸ்.ஐ. சட்டையை பிடித்த தாய்..!
Photo: Polimer News

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதி தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு. இவரது மனைவி டில்லி ராணி  சாப்பாடு கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன் பிரதீப் என்பவர் சிகப்பு பச்சை மஞ்சள் திரைப்படத்தில் ஜி. வி. பிரகாஷுக்கு எதிராக பைக் ரேஸில் பங்கேற்கும் வேடத்தில் நடித்திருந்தார். சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மகும்பல் பிரதீப்பை சராமரியாக வெட்டி முகத்தை சிதைத்து தப்பி சென்றனர். மகனின் உடலை கண்டு கதறி அழுத பிரதீப்பின் தாய் டில்லிராணி, காவல் ஆய்வாளர் அலெக்ஸ் தூண்டுதலின் பேரில் கந்து வட்டி கும்பல் தனது மகனை கொலை செய்து விட்டதாக குற்றஞ்சாட்டினார். அப்போது அங்கு வந்த எஸ். ஐ செந்தில்குமாரை மறித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பிரதீப்பின் தாய் டில்லி ராணி அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை தனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக 18 லட்சம் ரூபாய் வரை வட்டி பணம் கட்டிய நிலையில், அசல் பணம் 3 லட்சம் ரூபாய் அப்படியே இருப்பதாக கூறி நவநீதம் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக டில்லிராணி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடனை வாங்கிக் கொண்டு பணத்தை தர மறுப்பதாக நவநீதம் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் புகார்களை போலீசார் விசாரிக்க கூடாது என்ற உத்தரவை மீறி, கடந்த மார்ச்  மாதம் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து டில்லி ராணியின் மகன் பிரதீப் தனது கையை பிடித்து இழுத்ததாக நவநீதம் கடந்த ஜூலை மாதம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறி பிரதீப்பை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ்  காவல் ஆய்வாளர் அலெக்ஸ் கைது செய்தார். பிரதீப்பை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆனால் நீதிமன்றத்தில் இது காவல் ஆய்வாளரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஆதாரமில்லாத அவதூறு என்று பிரதீப்தரப்பு வழக்கறிஞர் வாதாடியதால் நீதிபதி அவரை காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார். இதனால் பிரதீப் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை இருவேளையும் பிரதீப் கையெழுத்து போட்டு வந்தார். கடந்த 30ந்தேதியுடன் கையெழுத்து போட்டு முடித்த நிலையில்  தன் மீது பொய் வழக்கு போடவைத்த நவநீதத்தின் மகன் நவீன் மீது பிரதீப் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் அலெக்ஸ், பிரதீப்பை அழைத்து, எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சம்பவத்துக்கு முந்தைய நாள், காவல் ஆய்வாளர் அலெக்ஸ் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக பிரதீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த நிலையில் தான் மர்ம கும்பல் பிரதீப்பை  வெட்டி கொலைசெய்ததாக பிரதீப்தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கந்துவட்டி புகாருக்குள்ளான நவநீதத்தின் மகன் நாராயணன் என்கிற நவீன் (32), ஹரி கிருஷ்ணன் (21), ஜபார் (24) லோகேஷ் (27)ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பிரதீப் திமுகவின் 10 வது வார்டு பாக அமைப்பாளராக இருந்தவர். இந்த வழக்கின் A1  என்று போலீசாரால் குறிப்பிடப்பட்டுள்ள நவீன்,10 வது வார்டு திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடதக்கது.