'கருத்தரிப்பு சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் செலவு செய்தோம் - இப்போது எங்கள் கருக்கள் அழிக்கப்பட உள்ளன'
Read at BBC News Tamil1 outlet covered this
'கருத்தரிப்பு சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் செலவு செய்தோம் - இப்போது எங்கள் கருக்கள் அழிக்கப்பட உள்ளன'
How outlets told it

பட மூலாதாரம், Nat Fraser-Edwardsபடக்குறிப்பு, நாட் (இடது) மற்றும் நிக் ஃப்ரேசர்-எட்வர்ட்ஸ்எழுதியவர், அலெக்ஸாண்ட்ரா பான்ஃபிபதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்நாட் மற்றும் நிக் ஃப்ரேசர்-எட்வர்ட்ஸ் தம்பதி கடந்த மாதம் தங்கள் மகன் ஜூடின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடினர். பலமுறை மேற்கொண்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் தோல்வியடைந்த நிலையில், ஜூட் அவர்களுக்கு நிறைவேறிய கனவாக இருந்தார். அடுத்த ஆண்டு அவருக்கு ஒரு சகோதரனோ சகோதரியோ கிடைக்க வேண்டும் என்று அவர்கள் நம்பியிருந்தனர். ஆனால், இப்போது அவர்களின் கனவுகள் "சிதைந்து போயுள்ளன". அவர்களுக்காக விந்தணு தானம் செய்த நபர், இனி அதைப் பயன்படுத்துவதற்கான தனது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளார். இதனால், சேமித்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஐந்து கருக்களும் அழிக்கப்பட உள்ளன. இந்தத் தம்பதியினர் கருத்தரிப்பு சிகிச்சைக்காக ஏற்கெனவே 23,000 பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம்) செலவிட்டுள்ளனர். பிரிட்டனில், விந்தணு அல்லது கருமுட்டை தானம் செய்பவர், அந்தக் கரு கருப்பைக்குள் செலுத்தப்படும் வரை தனது ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். ஒரு கரு உருவாக்கப்பட்டுவிட்டால், அதன்பிறகு ஒப்புதலைத் திரும்பப் பெற முடியாத வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று இந்தத் தம்பதியினர் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். பட மூலாதாரம், Nat Fraser-Edwardsபடக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜூட் பிறந்தார். நாட் மற்றும் நிக் ஃப்ரேசர்-எட்வர்ட்ஸ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தங்களது இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பம் தரிக்க நம்பியிருந்தனர். பிரிட்டன் அரசு இந்தத் தம்பதியினருக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது. மேலும், "ஒழுங்குமுறை நடைமுறையின் அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.2023-ஆம் ஆண்டு தேனிலவு முடிந்து திரும்பிய பிறகு, வடக்கு வேல்ஸைச் சேர்ந்த நாட் மற்றும் நிக் தம்பதி கருத்தரிப்பு சிகிச்சையைத் தொடங்கினர்.Skip அதிகம் படிக்கப்பட்டது and continue readingஅதிகம் படிக்கப்பட்டதுEnd of அதிகம் படிக்கப்பட்டதுவாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்வாட்ஸ்ஆப்பில்பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்பின்தொடர கிளிக் செய்யவும்வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவுகடன்களைப் பெற்றுக்கொண்டு, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையின் பல சுற்றுகளை மேற்கொண்டனர். ஆனால், அவை அனைத்தும் தோல்வியடைந்தன. இந்த சிகிச்சைகளுக்காக அவர்கள் மொத்தம் 23,000 பவுண்டுகள் செலவிட்டனர்."அந்தக் காலகட்டத்தில் மிகுந்த வேதனையை அனுபவித்தோம். எங்களைச் சுற்றியிருந்த அனைவரும் கர்ப்பமடைவது போலத் தெரிந்தது," என்று 37 வயதான நாட் நினைவுகூர்ந்தார். பின்னர், வேறு வகையான சிகிச்சையான ஐடிஎஸ்ஐ சிகிச்சையை அவர்கள் நாடினர். இதில் கருமுட்டையுடன் விந்தணுவைச் சேர்த்து, உடலுக்கு வெளியே கருவை உருவாக்குகின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. நாட் மற்றும் நிக் தம்பதிக்கு இறுதியில் ஆறு கருக்கள் உருவாகின. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜூட் பிறந்தார். அந்தக் கருக்கள், தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்த தம்பதியினர் தயாராகும் வரை சேமித்து வைக்கப்பட்டன. ஆனால், ஜூன் மாதம் தொலைபேசி மூலம் நடைபெற்ற ஆலோசனையின்போதுதான், தங்கள் கருக்கள் அழிக்கப்பட உள்ளதை அவர்கள் அறிந்துகொண்டனர்."'துரதிர்ஷ்டவசமாக, உங்கள் கருக்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை விந்தணு தானம் செய்தவர் திரும்பப் பெற்றுவிட்டார்' என்று அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்," என்று நாட் கூறினார்."'ஒரு வருடம் காத்திருக்கும் காலமாக அவற்றைச் சேமித்து வைப்போம். அதன்பிறகு அவை அழிக்கப்படும்''' என்று அவர்கள் கூறினர்."நாங்கள் முற்றிலும் அதிர்ச்சியடைந்துவிட்டோம்."விந்தணு தானம் செய்தவர் அந்தக் கட்டத்திலும் தனது ஒப்புதலைத் திரும்பப் பெற முடியும் என்பதை அறிந்தபோது, தாங்கள் "எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளானதாக" நிக் கூறினார்."ஆம், நாங்கள் ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தோம். ஆனால், இந்த விஷயம் வாய்மொழியாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக எங்களுக்கு நினைவில்லை," என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம், Nat Fraser-Edwardsபடக்குறிப்பு, கருத்தரிப்பு சிகிச்சையின் பல சுற்றுகள் தோல்வியடைந்த நிலையில், நாட் மற்றும் நிக் ஃப்ரேசர்-எட்வர்ட்ஸ் சமீபத்தில் தங்கள் மகன் ஜூடின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடினர். பிரிட்டனில் ஒப்புதலைத் திரும்பப் பெறும் விந்தணு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஏனெனில், இதுதொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை என்றாலும், முற்றிலும் நடக்காதவை அல்ல. சாம் பீஸ்லே மற்றும் கார்லி எஸ்ட்லிக் தம்பதியினர் ஐவிஎஃப் சிகிச்சைக்குப் பிறகு, தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அக்டோபரில் பிறக்கவுள்ள ஆண் குழந்தைக்கு ஃபின் என்று பெயரிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்."சிறு வயதில் இருந்தே, வாழ்க்கையில் எனது பணி ஒரு தாயாக இருப்பதுதான் என்று நான் அறிந்திருந்தேன்," என்று 41 வயதான சாம் கூறினார். நாட் மற்றும் நிக் தம்பதியைப் போலவே, சாம் மற்றும் கார்லி தம்பதியினருக்கும் கடந்த மாதம் ஒரு அதிர்ச்சியான தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்காக விந்தணு தானம் செய்தவர் தனது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் 10 கருக்களும் அடுத்த ஆண்டு அழிக்கப்படும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பட மூலாதாரம், Sam Beesleyபடக்குறிப்பு, சாம் பீஸ்லே மற்றும் கார்லி எஸ்ட்லிக் தம்பதி"அவர் தனது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறி கடிதம் வந்தபோது, எங்கள் நம்பிக்கையே பறிபோனது போல் உணர்ந்தோம்," என்று சாம் கூறினார்."கர்ப்பம் மற்றும் அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டுவிடுமோ என்பதிலேயே நாங்கள் அதிக கவனம் செலுத்தி வந்தோம். அதனால், நடந்தது இன்னும் முழுமையாக எங்கள் மனதில் பதியவில்லை என்றுதான் நினைக்கிறேன். கார்லி ஏற்கெனவே துக்கத்தில் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, அந்தக் கருக்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், 2027-ஆம் ஆண்டு அந்த நாள் வரும் வரை நான் போராடுவதை நிறுத்தமாட்டேன்."இந்தச் செய்தி தங்களது தற்போதைய கர்ப்பத்திலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சாம் கூறினார்."ஃபின்னுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கார்லி மிகவும் அஞ்சுகிறார். அந்த எண்ணம் எனக்கும் வந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் குழந்தையின் அசைவுகள் குறைந்திருந்ததால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. 'இதுவும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமா?' என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.''"பெற்றோராக மாறுவதற்கான எங்களின் ஒரே வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கலாம். மீண்டும் இதுபோன்ற சிகிச்சையை மேற்கொள்ளும் அளவுக்கு நிதி ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும், உடல் ரீதியாகவும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை."இரு தம்பதியினருக்கும் கருத்தரிப்பு சிகிச்சை உணர்வுபூர்வமாகவும், நிதி ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தைப் பெறுவதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருந்ததாக நாட் மற்றும் நிக் கூறுகின்றனர். ஆனால், மொத்தம் 23,000 பவுண்டுகள் செலவானதால், தாங்கள் பல "தியாகங்களை" செய்ய வேண்டியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்."இந்த சிகிச்சையைச் சாத்தியமாக்குவதற்காக நீண்ட காலம் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்தோம்," என்று நாட் கூறினார்."அதிகமான சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகக் கடன் வாங்கினோம்."பட மூலாதாரம், Sam Beesleyபடக்குறிப்பு, சாம் பீஸ்லே மற்றும் கார்லி எஸ்ட்லிக்மீண்டும் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ளும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என்றும் நாட் மற்றும் நிக் கூறுகின்றனர். இதனால், நிக்கால் இனி ஒருபோதும் கர்ப்பத்தை அனுபவிக்க முடியாமல் போகலாம்."ஒரு பெண்ணாக, கர்ப்பம் தரிப்பது என்பது அற்புதமான அனுபவம் என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் அதற்காக வருத்தப்படக் கூடாது என்பதால்தான் அதை அனுபவிக்க விரும்பினேன்," என்று 36 வயதான நிக் கூறினார்."ஜூடுக்கு ஒரு சகோதரர் அல்லது சகோதரி இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால், நாட் கர்ப்பத்தை அனுபவிப்பதைப் பார்த்தபோது, நிலைமை சற்று மாறியது. 'நானும் இதை அனுபவிக்க விரும்புகிறேன்' என்று நினைக்கத் தொடங்கினேன்."பிரிட்டனின் கருத்தரிப்பு சிகிச்சை ஒழுங்குமுறை அமைப்பான ஹெச். ஃப். இ. ஏ, விந்தணு தானம் தொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது பிரிட்டன் அரசின் முடிவைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளது."கருமுட்டை அல்லது விந்தணுவை தானமாக வழங்கும் ஒவ்வொரு நபருக்கும், ஒரு குழந்தை பிறப்பதற்கு தான் சம்மதிக்கிறோமா, இல்லையா என்பதைத் தாங்களே முடிவு செய்யும் உரிமை இருப்பது பற்றிய விஷயம் இது," என்று ஹெச். ஃப். இ. ஏ-வின் இணக்கத்துக்கான இயக்குநர் ரேச்சல் கட்டிங் கூறினார். பட மூலாதாரம், Nat Fraser-Edwardsபடக்குறிப்பு, நாட் ஜூடைச் சுமந்து செல்வதைப் பார்த்தபோதுதான், தானும் கர்ப்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாக நிக் கூறினார்."கருக்கள் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டுவிட்டால், அதன்பிறகு ஒப்புதலைத் திரும்பப் பெற முடியாது. சட்டம் தற்போது எழுதப்பட்டுள்ள விதிமுறைப்படி, அந்தக் கட்டம் வரை ஒப்புதலைத் திரும்பப் பெற முடியும். இந்த விவகாரத்தை நாங்கள் மேலும் ஆராயலாம். ஆனால், சட்டத்தை மாற்றுவது அரசின் முடிவைப் பொறுத்தது. அது ஹெச். ஃப். இ. ஏ-வின் அதிகார வரம்புக்குள் இல்லை. எங்களால் சட்டத்தை மாற்ற முடியாது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் தம்பதியினரின் நிலை குறித்து நாங்கள் அனுதாபம் கொள்கிறோம்." என ஹெச். ஃப். இ. ஏ கூறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும்போது அது "மிகவும் வருத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதால்", விந்தணு தானம் செய்பவர்கள் தங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு முன்கூட்டியே எச்சரிப்பது முக்கியம் என்று ஹெச். ஃப். இ. ஏ தெரிவித்துள்ளது. கருத்தரிப்பு சிகிச்சையின்போது "கடினமான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை" எதிர்கொள்ளும் அனைவரின் நிலை குறித்தும் தாங்கள் அனுதாபம் கொள்வதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், "தரமான, அக்கறையுடன் கூடிய சிகிச்சையை வழங்குவதற்கு கருத்தரிப்பு சிகிச்சைத் துறையுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். இதே நோக்கத்துடன், ஒழுங்குமுறை நடைமுறையின் அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
