தமிழகத்தில் 4 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை: ஆர்டிஐ மனுவில் பதில்
Read at The Hindu TamilCivic issues · 1 outlet covered this
தமிழகத்தில் 4 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை: ஆர்டிஐ மனுவில் பதில்
How outlets told it

Updated on: 12 Sep 2026, 3:51 am1 min readசென்னை: தமிழகத்தில் நடைபெறும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களில், 4 திட்டங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருப்பது ஆர். டி. ஐ மூலமாக பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதுதவிர, இரட்டை பாதை திட்டங்களுக்கும் குறைவான நிதியே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்து வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றச்சாட்டி வருகிறது. இருப்பினும், புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதியும் ஒதுக்காதது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் நடைபெறும் திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரங்களை கேட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 870.78 கி. மீ. தொலைவுக்கு 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, நடப்பு பட்ஜெட்டில் ரூ.497.57 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடுகையில், 19.48 சதவீதம் குறைவாக இருக்கிறது. பல்வேறு புதிய பாதை திட்டங்களுக்கு நிதி குறைத்துள்ளது தெரியவந்தது. மேலும், திண்டிவனம் – செஞ்சி– திருவண்ணாமலை (70 கி. மீ.) அத்திப்பட்டு – புத்தூர் (88.30 கி. மீ.), ஈரோடு – பழனி (91.05 கி. மீ.), சென்னை – மாமல்லபுரம் – கடலுார் (179.28 கி. மீ.) ஆகிய புதிய பாதை திட்டங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதிய ரயில் பாதைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.497.57 கோடியில் வெறும் இரண்டு திட்டங்கள் மட்டுமே மொத்த நிதியில் 87.4 சதவீதம் பெற்றுள்ளன. தமிழகத்தில் இரட்டை பாதை-கூடுதல் பாதை திட்டங்கள் மிகக்கடுமையான நிதிச்சரிவை சந்தித்துள்ளன. 14 இரட்டைப்பாதை- கூடுதல் பாதை திட்டங்களின் (658.34 கி. மீ.) மொத்த மதிப்பீடு ரூ.8,173.35 கோடி. ஆனால், 2026-27-ம் நிதியாண்டில் வெறும் ரூ.324.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. காட்பாடி - விழுப்புரம், சேலம் - கரூர் - திண்டுக்கல், ஈரோடு - கரூர் ஆகிய 3 முக்கிய திட்டங்களுக்கான நிதி ரூ.400.45 கோடியில் இருந்து ரூ.12 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், புதிய, இரட்டைபாதை பணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. இது குறித்து, சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், "தமிழகத்தில் ரயில் பாதை அமைக்கும் பணிகளில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதில், 20 ஆண்டுகளை இழந்து விட்டோம். இனியும் தாமதிக்க கூடாது. தமிழகத்தின் ரயில்வே உட்கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்திட தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
