1 outlet covered this

தொடா் விடுமுறை: பேருந்துகளில் மக்கள் கூட்டம்

How outlets told it

Dinamani652d ago

தொடா் விடுமுறை: பேருந்துகளில் மக்கள் கூட்டம்

Read at Dinamani
தொடா் விடுமுறை: பேருந்துகளில் மக்கள் கூட்டம்
Photo: Dinamani

தொடா் விடுமுறை என்பதால் திருச்சியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை முதல் அலைமோதியது. பல்வேறு ஊா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்கியதால், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடும் நெரிசலால் திணறியது. இதேபோல, திருச்சியிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு செல்வதற்காக பயணிகள் கூட்டத்தால் மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலும் அதிகரித்துக் காணப்பட்டது. 3 நாள்கள் விடுமுறை: சனி, ஞாயிறு விடுமுறை, விநாயகா் சதுா்த்தி விடுமுறை என தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை காரணமாக, பல்வேறு ஊா்களில் இருந்து திருச்சிக்கு வந்து பணியாற்றும் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள், கல்வி நிமித்தம் திருச்சியில் தங்கியிருந்த மாணவா், மாணவிகள் என அனைவரும் சொந்த ஊா் திரும்புகின்றனா். பேருந்து நிலையங்களில் கூட்டம்: இதேபோல, பல்வேறு ஊா்களில் சொந்த ஊரான திருச்சிக்கு வருகின்றனா். திருச்சியில் உள்ள 3 பேருந்து நிலையங்களும் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே பரபரப்பாக காணப்பட்டன. புகா்ப் பேருந்துகள் மட்டுமல்லாது நகரப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து சென்ாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சிறப்பு ஏற்பாடுகள்: பொதுமக்கள் தங்கள் ஊா்களுக்குச் செல்லும் வகையில் திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் துரித நடவடிக்கையால், அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் நகரப் பேருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கமான பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள், கூடுதல் பேருந்துகள் என்ற வகையில் பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டன. சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூா், வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் திருச்சியிலிருந்து அதிகளவில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்கம்: இதுமட்டுமல்லாது, பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து திருச்சி மாநகருக்குள் செல்ல கூடுதலாக நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூா், பெரம்பலூா், அரியலூா், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. பஞ்சப்பூா், சத்திரம், மத்தியப் பேருந்து நிலையம் என 3 பேருந்து நிலையங்களும் முழுவீச்சில் இயங்கின. திருச்சியிலிருந்து சென்னை, கோவை, திருப்பூா், சேலம், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதேபோல, பிற்பகலுக்கு மேல் சென்னையிலிருந்து வந்த பேருந்துகளில் வந்து இறங்கிய பயணிகளாலும் பஞ்சப்பூா் பேருந்து நிலையம் திணறிப் போனது. இரு மடங்கு கூடுதல் கட்டணம்: திருச்சி மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கணிசமாக இருந்தன. தென்மாவட்டங்களுக்குச் செல்ல கூட்டம் நிரம்பியிருந்ததால், தனியாா் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியாா் வேன்கள், வாடகை காா்களில் வழக்கத்தைவிட இருமடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணிக்க நேரிட்டது. திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ. 200 முதல் ரூ.400 வரை கட்டணம் செலுத்தி சென்றனா். வாகனம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் கிடைத்த வாகனங்களில் கேட்ட கட்டணத்தைக் கொடுத்து மக்கள் பயணம் செய்ததைக் காண முடிந்தது. பலரும் தங்களது சுமைகளுடன் பேருந்துகளைத் தேடி சுற்றி வந்ததைக் காண முடிந்தது. போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப பேருந்துகளை மாற்றி இயக்கினா். ரயில்களிலும் கூட்டம்: திருச்சி வழியாக தென்மாவட்டங்கள், சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ரயில்வே காவல் நிலைய போலீஸாா் ரோந்து சுற்றி வந்து பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டதுடன், கூட்ட நெரிசலையும் ஒழுங்குபடுத்தினா்.