Religion and culture · 1 outlet covered this

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது

How outlets told it

Daily Thanthi992d ago

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது

Read at Daily Thanthi
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 12:42 pmமதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை இன்று தொடங்கியது. இன்று மாலையில் இருந்து 17-ந் தேதி காலை வரை மூலவரை பக்தர்கள் தரிசிக்க இயலாது. பூர்வாங்க பூஜைகள்மதுரையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு முன்புள்ள பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை நடைபெற்றன. நேற்று நடந்த நிகழ்ச்சியில் யாகசாலை பூஜைக்கு தலைமை வகிக்கும் 16 சிவாச்சாரியார்களுக்கான வழிபாடு பொற்றாமரை குளக்கரையில் நடந்தது. அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மேள தாளம் முழங்க வந்து, மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்தனர். மாலையில் 16 தலைமை சிவாச்சாரியார்கள் மற்றும் யாகசாலை பூஜையில் பங்கேற்கும் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.12 கால யாகசாலை பூஜைகள்இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கி யானை மகால் அருகே சூரியனிடம் இருந்து யாக சாலைக்கு அக்னி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 4.35 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதை தொடர்ந்து 17-ந் தேதி காலை வரை, மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன. யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹுதியைத் தொடர்ந்து 16-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 17-ந்தேதி அன்று காலை 7.40 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. எத்தனை குண்டங்கள்?கும்பாபிஷேகத்திற்காக பல லட்ச ரூபாய் செலவில் அமைந்துள்ள பிரமாண்ட யாக சாலையில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்கு என்று தனித்தனியாக 33 வேள்வி குண்டங்கள் உள்ளன. மேலும் சித்தர், நடராஜர், உற்சவர், 2 தங்க விமானங்கள், முக்குறுணி விநாயகர், சுப்பிரமணியர், சித்தி விநாயகர், 5 ராஜ கோபுரங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக 3 வேள்வி குண்டங்களும், மற்ற பரிவார தேவதைகளுக்கு, 40 வேள்வி குண்டங்கள் உள்பட மொத்தம் 184 வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சிவ ஆகம வல்லுனர்கள், 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள், பரிஜாதர்கள் உள்பட பலர் இணைந்து வேள்வி பூஜைகளை நடத்துகிறார்கள். மூலவர் தரிசனம் ரத்துகும்பாபிஷேகத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து 17-ந் தேதி காலை வரை மூலவர் மீனாட்சி அம்மன். சுந்தரேசுவரரை தரிசிக்க இயலாது. இந்த நாட்களில் அந்த சன்னதிகளில் மராமத்து பணிகள் மேற்கொண்டு, மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். எனவே அன்றைய தினங்களில் மூலவர் அம்மனையும். சுவாமியையும் பக்தர்கள் தரிசிக்க முடியாது. பக்தர்கள் யாகசாலை பகுதிக்கு மட்டும்தான் சென்று வர முடியும். 17-ந் தேதி கும்பாபிஷேகத்துக்கு பின்பு மூலவர் மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் பக்தர்கள் வழக்கம் போல் தரிசிக்கலாம்.