Politics · 1 outlet covered this

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தல்

How outlets told it

Daily Thanthi992d ago

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தல்

Read at Daily Thanthi
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தல்
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 1:58 pmசென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில், இன்று (11.09.2026) அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்குமார் (அண்ணாநகர்), பாலமுருகன் (அம்பத்தூர்), ரேவந்த் சரண் (மதுரவாயல்), அண்ணாநகர் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் காயத்ரி கிருஷ்ணன், இ. ஆ. ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் எச். ஆர்கௌஷிக், இ. ஆ. ப., மண்டல அலுவலர்கள் எம். பி. தணிகைவேலன், எஸ். இனியன், எஸ். செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி பேசும்போது தெரிவித்ததாவது:-தூர்வாரும் பணிகள்அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள 47 நிவாரண முகாம்கள், 19 மைய சமையல் கூடங்கள் (Cooking Centres) மற்றும் 9 காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை (Cluster Kitchens) தயார்நிலையில் வைத்திட வேண்டும். வில்லிவாக்கம் மற்றும் ஹாரிங்டன் சுரங்கப்பாதைகளில் உள்ள கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளது. ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அம்பத்தூர் சிட்கோ, பாடிக்குப்பம், டிரஸ்ட்புரம் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச்சுவர் உயர்த்திக் கட்டுதல் மற்றும் வேலிகள் அமைத்தல், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளையும், ஆன்ஸ்லி மற்றும் டி. வி. எஸ். கால்வாய், ரெயில்வே கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி நீர் சீராகச் செல்லும் வகையில் வழி செய்ய வேண்டும். தூர்வாரும் பணிகள்கொரட்டூர், நுங்கம்பாக்கம், கண்ணகி சிலை மற்றும் உழைப்பாளர் சிலை சுரங்கப்பாதைகளில் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றுவதற்கு டீசல் / மின்சார மோட்டார் பம்புகள் மற்றும் ஜென்செட்கள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திட வேண்டும். மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் தூர்வாருதல், சாலை வெட்டு சீரமைப்பு, மின் இணைப்புப் பெட்டிகளை உயர்த்திக் கட்டுதல், மின் கேபிள்களை பூமிக்கடியில் புதைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுமக்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இடையூறின்றி மேற்கொண்டு பருவமழைக்கு முன்னதாக முடித்திட வேண்டும் என அமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அவர்கள், அம்பத்தூர் மண்டலத்தில் சி. டி. எச். சாலை, பாடி சரவணா ஸ்டோர் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி, அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி, அண்ணாநகர் மண்டலத்தில் வார்டு-94க்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயின் ஆரம்பப் பகுதி மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, தேனாம்பேட்டை மண்டலத்தில் குளக்கரை சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, தியாகராய சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.