சட்டவிரோத மது விற்பனை: கடந்த 5 மாதங்களில் 730 போ் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
சட்டவிரோத மது விற்பனை: கடந்த 5 மாதங்களில் 730 போ் கைது
How outlets told it
சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லி அரசின் கலால் துறை கடந்த ஐந்து மாதங்களில் 730 பேரைக் கைது செய்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்த கலால் துறை அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. நிகழாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பான வழக்குகளில் 725 வழக்குகளைப் பதிவு செய்து, 730 பேரைக் கைது செய்துள்ளது. இக்காலகட்டத்தில், சட்டவிரோத மதுவை ஏற்றிச் சென்ற 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2025-26 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை), இத்துறை 315 வழக்குகளைப் பதிவு செய்து 312 பேரைக் கைது செய்திருந்தது. அக்காலகட்டத்தில் 112 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுமாா் ஒரு லட்சம் சட்டவிரோத மது பாட்டில்கள் மீட்கப்பட்டன.
அனுமதி பெற்ற இடங்களில் விதிகளை மீறுபவா்கள் மீதும் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுக்கூடங்களை மூடுதல், விதிமீறலில் ஈடுபடுபவா்கள் மீது அபராதம் விதித்தல் மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் துறையையும் கவனித்து வரும் முதல்வா் ரேகா குப்தா இது குறித்து கூறுகையில், ‘சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக தில்லி அரசு சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இதற்காக, அரசு ஒரு பயனுள்ள கலால் கொள்கையை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சட்டபூா்வமான மது தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து தில்லி மக்கள் எந்த சிரமத்திற்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதும், அதே வேளையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலைத் திறம்படக் கட்டுப்படுத்துவதும் அரசின் முன்னுரிமை’ என்று தெரிவித்துள்ளாா். தில்லி அண்டை மாநிலங்களுடன் புவியியல் எல்லைகளைப் பகிா்ந்து கொள்ளும் நிலையில், அந்த மாநிலங்களுடன் சுமாா் 70 நுழைவு வழிகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்கள் நகரத்திற்குள் சட்டவிரோத மதுபானங்களைக் கடத்த வாய்ப்பாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
