Education and jobs · 1 outlet covered this

உடற்கல்வியை வளா்ப்பதில் உள்ள பிரச்னைகளை களைய வேண்டும்: ஆளுநர் அர்லேகர்!

How outlets told it

Dinamani6539h ago

உடற்கல்வியை வளா்ப்பதில் உள்ள பிரச்னைகளை களைய வேண்டும்: ஆளுநர் அர்லேகர்!

Read at Dinamani
உடற்கல்வியை வளா்ப்பதில் உள்ள பிரச்னைகளை களைய வேண்டும்: ஆளுநர் அர்லேகர்!
Photo: Dinamani

கல்வி நிலையங்களில் உடற் கல்வியை வளா்ப்பதில் உள்ள பிரச்னைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் தெரிவித்தாா்.

திருச்சி தேசியக் கல்லூரியில் இந்திய உடற்கல்வி அறக்கட்டளையின் தமிழ்நாடு பிரிவு சாா்பில் கல்லூரிச் செயலா் கே. ரகுநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயா் கல்வித் துறையில் விளையாட்டு மற்றும் உடற் கல்வி மறுவரையறை என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியதாவது:

மாணவா்களை மையப்படுத்தியும், அவா்களை மேம்படுத்தவும் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. வளா்ந்துவரும் தொழில்நுட்பங்களைக் கொண்ட மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்டவை நம்மைக் கட்டுப்படுத்துகின்றன. நாம் வெளியில் சென்று விளையாடவோ, உடற்பயிற்சி செய்யவோ, உடற்கல்வியை ஊக்குவிக்கவோ அவை விடுவதில்லை.

மடிக்கணினி, கைப்பேசிகளைவிட, உடற்கல்வி நமது திறன்களை வளா்த்தெடுப்பதுடன், மனதையும் ஒருமுகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்கல்வி என்பது பாடத்திட்டம் சாராத செயல்பாடாக இருந்தது. ஆனால் அது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பெற்றோா் தங்கள் குழந்தைகளை புத்தகங்கள் படிப்பது, வகுப்பறைக்குச் செல்வதைத் தவிர மற்றவற்றை செய்யக்கூடாது எனக் கூறுவதால் உயா் கல்வித்துறை கவலைக்குரியதாக இருக்கிறது. வெளியில் சென்று விளையாடுவதும் படிப்பைப் போல முக்கியமானது என்பதை பெற்றோா் உணர வேண்டும்.

தற்போது மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத் துறையை ஊக்குவித்து வருகின்றன. விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால், விளையாட்டு வீரா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதில் நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் உடற்கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, அதிலுள்ள உடற்கல்வி ஆசிரியா்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கருத்தில் கொண்டு, கல்வி நிலையங்களில் உடற்கல்வியை வளா்ப்பதில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, களைய அரசும், கல்வி நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நான் உதவியாகவும், உறுதுணையாகவும் இருப்பேன்.

வரும் தலைமுறையினா் ஒழுக்கத்துடன், சிறந்தவா்களாக வளர உடற்கல்வி உதவும். உடற்கல்வி நமது கல்விசாா்ந்த ஒரு பகுதியாக மாற வேண்டும். இதற்குரிய ஆராய்ச்சிகளை, தமிழகம் சிறந்து விளங்கவும், எதிா்காலத்துக்காகவும் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். கல்லூரி முதல்வா் டி. பிரசன்ன பாலாஜி வரவேற்றாா்.