சாலமன் பாப்பையா (1936 - 2026): பட்டிமன்றத்தை உலகெங்கும் பரப்பியவர் | அஞ்சலி
Read at The Hindu TamilWorld · 1 outlet covered this
சாலமன் பாப்பையா (1936 - 2026): பட்டிமன்றத்தை உலகெங்கும் பரப்பியவர் | அஞ்சலி
How outlets told it

Updated on: 13 Sep 2026, 1:28 am2 min read90 ஆண்டுகள் வாழ்ந்த சாலமன் பாப்பையா, தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமூகச் சிந்தனைகளுக்காக முழுமையாக அர்ப்பணித்தவர். நல்லறிஞர், தமிழ் மூதறிஞர், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சாலமன் பாப்பையா, மகாகவி பாரதியார் மீது மிகுந்த பற்றுடையவர். அவரது மறைவு, பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ந்திருப்பது நம்மைத் துயரில் ஆழ்த்துகிறது. அவரது புகழையும் பெருமையையும் நாம் நினைவுகூரும் வேளையில், அவரோடு எனக்கிருந்த தொடர்பையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தையாருடன் சென்று தரையில் அமர்ந்து அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். அதன் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றபோது, அனைத்துக் கல்லூரிகளுக்குமான பேச்சுப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று அவரது கரங்களால் பரிசு பெற்றேன். பிற்காலத்தில் பட்டிமன்றங்களில் அவரது அணியிலேயே பேசும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவரோடு பட்டிமன்ற மேடைகளில் பேசிய பெருமை மட்டுமல்லாது, 2003ஆம் ஆண்டு வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA - பெட்னா) அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது, அவருடன் நானும் சென்றிருந்தேன். அவரோடு நான்கு வாரங்கள் இணைந்து பயணிக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் நாங்கள் இருவரும் மேடைகளில் மாறி மாறிப் பேசி, பெருவாரியான மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றோம். அங்கு இரவு நேரப் பயணங்களின் போதும், ஓய்வெடுக்கும் விடுதி அறைகளிலும் பாரதியாரின் பாடல்களை அற்புதமாகப் பாடுவார். பாடல்களைப் பாடும் தனித்திறமையும் அவரிடம் இயல்பாகவே இருந்தது. அவர் பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். அதில் அட்டைப்படத்துக்குரிய பட்டுக்கோட்டையாரின் உருவத்தை அவரே ஓவியமாகவும் வரைந்திருக்கிறார். அவரது கையெழுத்து அச்சு போன்று அழகாக இருக்கும். திருக்குறள் உரை, புறநானூறு உரை போன்ற பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அக்காலகட்டத்தில் பட்டிமன்றங்களுக்குப் பேருந்துகளில்தான் செல்ல வேண்டும். குழுவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்துப் பேருந்துகளில் அழைத்துச் சென்று, பட்டிமன்றம் முடிந்து திரும்பவும் பேருந்துக்காகக் காத்திருந்து, விடியற்காலையில்தான் மதுரைக்கு வந்து இறங்குவார். எனினும், காலையில் தவறாமல் கல்லூரிப் பணிக்குச் செல்வார். அவரோடு பயணித்த அந்தக் காலங்கள் எனக்குச் சிறந்த அனுபவங்களைத் தந்தவை. அவரோடு பட்டிமன்றங்களில் பேசிய ஒவ்வொருவருமே தனித்தன்மை வாய்ந்தவர்களாக உருப்பெற்றனர். அவருடனான மற்றொரு நிகழ்வையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். நான் முதன்முதலில் எங்களது ஊருக்கு ஐயாவைப் பட்டிமன்றத்தில் பேச அழைத்து வந்திருந்தேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஐயா உட்பட அனைவருக்கும் தொகையைக் கொடுத்தனர்; எனக்கு மட்டும் கொடுக்கவில்லை. ‘‘அவர் எங்களூர் பையன்தான், அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் தருவோம்’’ என்றனர். அதற்கு ஐயா, புன்னகையோடு, “அவர் உங்க ஊரு பையன்தான், அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கலாம்; தவறில்லை. ஆனால் அவர் வாழணும்ல? அதுக்கு வசதி செய்யணும்ல? எனவே, அவருக்கு வாய்ப்புகள் தருவதுபோலவே, முறையான பொருளுதவியும் செய்யுங்கள்” என்றார். ஊர்க்காரர்கள் சற்றே யோசித்தபோது, ஐயா தயங்காமல், தனக்குக் கொடுத்த தொகையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து எனக்குக் கொடுத்து, “தம்பி, வெச்சுக்கோங்க... நல்லா வருவீங்க!” என்று மனதார ஆசீர்வதித்தார். இன்றுவரை அந்த ஆசீர்வாதத்தைப் பெருமகிழ்வோடு நினைத்து, என் வாழ்வில் ஈட்டும் அனைத்துச் சம்பாத்தியமும் அவருடைய ஆசீர்வாதத்தின் பலனால்தான் கிடைக்கிறது என்று நெகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன். பிறர் வாழ வேண்டும் என்ற பரந்த மனசுக்குச் சொந்தக்காரர் அவர். பட்டிமன்றத்தைக் குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கியிருந்த இலக்கிய நிகழ்வாக வைத்திராமல், பட்டிதொட்டி முதற்கொண்டு உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததில் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. நகைச்சுவையுடன் சிந்திக்கத் தூண்டும் அவரது தனித்துவமான பேச்சுப்பாணி, எதிர்காலத்தின் பல தலைமுறைப் பேச்சாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. அவர் மத்திய, மாநில அரசுகளின் உயரிய விருதுகள் பல பெற்றிருந்தாலும், தன்னைப் பாராட்டிய சாதாரண மக்களின் அன்பையே மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதியவர். மதம், சாதி, பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற மானுடக் கருத்தை உரக்கச் சொன்னவர்.
