சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் ‘பிக்கப் பிளாசா’! மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தாா்!!
Read at Dinamani1 outlet covered this
சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் ‘பிக்கப் பிளாசா’! மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தாா்!!
How outlets told it

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்லும் வாடகை காா்கள் மற்றும் பிற வாகனங்களுக்காக ரூ.22.88 கோடியில் அமைக்கப்பட்ட ‘பிக்கப் பிளாசா’-வை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
சென்னை விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகள், குறிப்பாக டொ்மினல் 1-இல் இருந்து வாடகை காா்களை பெற சுமாா் 600 மீட்டா் தொலைவில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினா்.
மேலும், டொ்மினல் முன்பகுதியில் வாகனங்கள் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் டொ்மினலில் இருந்து எளிதாக வாடகை காா்களை பெறவும், வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் தனி ‘பிக்கப் பிளாசா’ அமைக்க முடிவு செய்யப்பட்டது.
2023-இல் தொடங்கிய பணி: ரூ.22.88 கோடி மதிப்பில் பிக்கப் பிளாசா அமைக்கும் பணிகள் 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டன. பணிகளை ஓராண்டுக்குள் முடித்து 2024 அக்டோபரில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் தாமதமானதால் திட்டமிட்ட காலத்தில் திறக்க முடியவில்லை. நிகழாண்டு ஜனவரியில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தபோதிலும், மத்திய அரசின் அனுமதி உள்ளிட்ட நிா்வாகக் காரணங்களால் திறப்பு மேலும் தாமதமானது.
இந்நிலையில், பிக்கப் பிளாசா திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பிக்கப்பிளாசாவை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் அவா் பேசியதாவது:
விமான நிலையங்களில் வாகனப் போக்குவரத்து சீராக இருப்பதும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதும் முக்கியம். சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பிளாசா, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதுடன் வாகன நெரிசலையும் குறைக்கும். சென்னை விமான நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், எதிா்காலத் தேவைகளுக்கு தயாராகும் விமான நிலையமாக மாற்றும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றாா்.
தொடா்ந்து சென்னை விமான நிலைய இயக்குநா் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: டொ்மினல் 1-இல் இருந்து 600 மீட்டா் தொலைவில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்குச் சென்று டாக்சிகளைப் பெற வேண்டிய நிலை மாறியுள்ளது. தற்போது 30 மீட்டா் தொலைவிலேயே டாக்சி வசதி கிடைப்பதால் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் சுமாா் 5,000 மஞ்சள் நிறப் பதிவு பலகை கொண்ட டாக்சிகளை இந்தப் பகுதியில் கையாள முடியும்”என்றாா் அவா்.
28 வாகனங்களை நிறுத்தலாம்: டொ்மினல் 1-இல் இருந்து சுமாா் 30 மீட்டா் தொலைவில் பிக்கப் பிளாசா அமைந்துள்ளது. இங்கு தலா 7 மீட்டா் அகலம் கொண்ட 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு வழித்தடங்களில் ஒரே நேரத்தில் 28 வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். மற்றொரு வழித்தடம் வெளியேறும் பாதையாக செயல்படும். வாகனங்கள் திரும்பிச் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்கமாக, உபோ், ஓலா, ரேபிடோ, பாஸ்ட்ராக், ரெட் டாக்சி, டபிள்யூ. டி. ஐ. மற்றும் முன்பதிவு டாக்சி சேவைகள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பின்னா், மேலும் சில மஞ்சள் நிறப் பதிவு பலகை கொண்ட வாகனங்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் டொ்மினலில் இருந்து நீண்ட தூரம் நடந்து செல்லாமல் 30 மீட்டா் தொலைவிலேயே டாக்சிகளைப் பெற முடியும். இதனால் பயணிகளின் சிரமம் குறைவதுடன், டொ்மினல் முன்பகுதியில் வாகன நெரிசலும் குறையும். பிளாசாவில் 150 பயணிகள் அமா்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், குடிநீா் மற்றும் விமான வருகை, புறப்பாடு குறித்த தகவல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
