லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை: பழனிசாமி, நயினார் விமர்சனம்
Read at The Hindu TamilPolitics · 1 outlet covered this
லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை: பழனிசாமி, நயினார் விமர்சனம்
How outlets told it

Updated on: 13 Sep 2026, 8:43 pm1 min readதிருச்சி/திருநெல்வேலி: லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளனர். திருச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவிலும், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடமும் அவர் பேசியது: குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி அழைத்துச் சென்றதுபோல, அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை ஆளும்கட்சியினர் அவர்களது பக்கம் இழுத்துச் சென்றுவிட்டனர். அதனால்தான் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் நிச்சயம் அதிமுக மீண்டும் வெற்றி பெறும். தற்போதைய அரசு கூட்டணிக் கட்சிகள் தயவுடன் தான் ஆட்சி நடத்துகிறது. அவர்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். எதுவுமே செய்யாமல் ஆட்சிக்கு வந்தவர்கள் தவெகவினர். அவர்களுக்கு வறட்சி, இயற்கை பாதிப்புகள் குறித்து எதுவும் தெரியாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும் ஒரே கட்சி அதிமுகதான். அதிமுக ஆட்சியில்தான் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. நாங்கள் கொண்டு வந்த ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டனர். இந்த ஆட்சியிலாவது அந்தத் திட் டத்தை செயல்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில், இன்று மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமா, முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார் என்று கூறுகின்றனர். ஆனால், அவர் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை. அதுதொடர்பாக எந்தப் புகைப்படமும் வெளியாகவில்லை. மாறாக வேறு புகைப்படங்கள்தான் வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார். கேள்விக்குறி: திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது: தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை வேடிக்கையாகவும் விந்தையாகவும் பொதுமக்கள் பார்க்கின்றனர். பொதுத்தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வருவதால், குதிரை பேரம் நடந்ததாகவே அனைவரும் சொல்கிறார்கள். இந்த குதிரை பேரம் எதற்காக நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். சட்டப்பேரவையில் ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசியுள்ளனர். தமிழக முதல்வர் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். சொந்த வேலையாக சென்றுள்ளாரா அல்லது யாருடன் சென்றுள்ளார் என்பது தெரியாது. அரசு செலவில் யார், யார் சென்றார்கள் என்பது தெரியாது. உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகச் சென்றாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 3 நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களைச் சந்திக்க முடியும் என்பது பெரியகேள்விக்குறி. தமிழகம் திரும்பியவுடன் முதலீட்டாளர்கள் குறித்தஅறிவிப்பை அவர் வெளியிட வேண்டும்.
