'ஓரங்கட்டப்படுகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? விசிகவுக்குள் வெடிக்கும் உள்விவகாரம்'- போட்டுடைக்கும் இசையமுதன்
தமிழக அரசியல் களத்தில் வலுவான தத்துவார்த்தக் குரலாக ஒலிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள், சமீபகாலமாகச் சில முக்கியத் தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் மேடைப் பேச்சுகள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கட்சியின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ், கட்சியின் முக்கிய மாநாடுகள் மற்றும் மாநாட்டு மலர் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்காமல் தவிர்த்து வருவது, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.
கட்சிக்குள்ளேயே அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறதா அல்லது அவர் திட்டமிட்டே விலகி இருக்கிறாரா என்ற விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலச் செயலாளர் இசையமுதன் கொடுத்த சிறப்பு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "விசிக-வில் எது நடக்க வேண்டுமோ அது எப்போதும் மிகச் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆளூர் ஷாநவாஸ் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வராமல் இருப்பது என்பது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட விருப்பமே தவிர, கட்சித் தலைமை அவரைப் புறக்கணிக்கவில்லை. எங்களது தலைவர் தொல். திருமாவளவன் அவருக்குக் கட்சியில் தகுந்த அங்கீகாரத்தையும், முதன்மைச் செயலாளர் என்ற மிக உயரிய பொறுப்பையும் வழங்கியுள்ளார். ஆனால், அவர் முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கட்சிக்கு முரணான சில கருத்துக்களைப் பதிவு செய்தார்.
அது கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே, மாநாட்டு மேடைகளில் எழும் முரண்பாடுகளைத் தவிர்க்க அவரே வராமல் இருந்திருக்கலாம். அதேபோல, அவர் விசிக மேடைகளை விட திமுகவின் மேடைகளில் அதிகம் பங்கேற்றுப் பேசி வருவதையும் நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவருக்கு அங்கு நலம் கிடைக்கிறது, அங்குப் பிடித்திருக்கு என்று அவர் நினைத்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
