திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை தொடக்கம்
சென்னை: திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னையில் இருந்து நாளை தொடங்குகிறது. பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று ஏழுமலையான் அருள் பெற, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது நடைபெறும் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ‘ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட்’ சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன.
நடப்பாண்டு திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் நாளை காலை 10:00 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 12:30 மணிக்கு பைராகி மடத்தை அடைகிறது. மாலை 4:00 மணிக்கு வால்டாக்ஸ் சாலை வழியாக கவுனி தாண்டி, சூளை நெடுஞ்சாலை, ஓட்டேரி மேம்பாலம் வழியாக அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலை சென்றடைகிறது.



