“இதனைச் சொல்லிவிட்டு அவரே ஓடிவிட்டார்” - டி.டி.வி. தினகரன் பேட்டி!
பரபரப்பான அரசியல் சூழலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று (06.09.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு மூன்று நாட்கள் கழித்து முதல்வர் பதில் சொல்ல உள்ளார். முதல்வர், ‘அதுவரைக்கும் யாரும் ஓடிப் போய்விடாதீங்க’ எனக் கூறியுள்ளார்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது, “இதனைச் சொல்லிவிட்டு அவரே ஓடிவிட்டார். அவருக்கு அப்படித்தான் பேசத் தெரிகிறது.
விஜயைப் பார்த்தால் சாதாரணமாக அமைதியாகத் தெரிகிறாரே தவிர, அவர் மிகவும் நரித்தனமாகவும், தந்திரமாகவும், இன்னும் சொல்லப்போனால் விஷமத்தனமான செயல்பாடுகளில்தான் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஒன்றும் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்து தேர்தல் வாக்குறுதிகளைச் சொல்லவில்லை. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் அவர் எடுப்பதாகத் தெரியவில்லை. அதை பற்றிய புரிதல் அவருக்கு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து அவருக்குத் தெரியவில்லை. அதனால், அவர்தான் வெளியே இருந்து போகிறார். மூன்று நாட்கள் கழித்து வந்து, தயார்படுத்தப்பட்ட ஒரு அறிக்கையை சினிமா டயலாக் மாதிரி படிப்பார். சினிமா வசனம் மாதிரிதான் இருக்கப்போகிறதே தவிர, அதனால் எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை. அதனால், இதன் மூலம் எந்தப் பலனும் இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை” எனத் தெரிவித்தார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

