கச்சத்தீவு விவகாரத்தில் தவெகவின் கிரிமினல் புத்தி?; மீனவர் துயரத்திற்கு தீர்வு எப்போது?-இள.புகழேந்தி கேள்வி
தமிழகச் சட்டமன்றத்தில் அண்மைக் காலமாக விவாதப் பொருளாக மாறியுள்ள கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள், அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. எல்லையில் மீனவர்கள் தங்களின் படகுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் சூழலில், சட்டமன்றத்தில் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் கடமைகளிலிருந்து தவறி விவாதங்களை திசை திருப்புவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து நக்கீரன் டிவிக்கு திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி கொடுத்த சிறப்பு நேர்காணலில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ''சட்டமன்றத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெறும் போது, அதற்குப் பொறுப்பான நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் திடீரென எழுந்து, கச்சத்தீவு விவகாரத்திற்கு திமுகதான் காரணம் என்று மேம்போக்காகக் கூறிவிட்டு அமர்ந்து சிரிக்கிறார். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ஒரு நாட்டின் எல்லையை மாற்றியமைப்பதோ, ஒரு நிலப்பகுதியை மற்றொரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதோ ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய ஒரு விஷயம் என்பது இந்த மாண்புமிகு அமைச்சர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்தே கிரிமினல் புத்தியோடு பாமர மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறார்களா?
அன்றைக்குத் திமுக ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட போது கூட, கலைஞர் மத்திய அரசிடம் மிகக் கடுமையாகப் போராடி, நமது தமிழக மீனவர்கள் அங்குள்ள அந்தோணியார் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று வரவும், வலைகளை உலர்த்தவும் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்ற விதிவிலக்குகளைப் பேசி வாங்கிக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு இருக்கும் தவெக அரசு, தங்களின் இயலாமையை மறைப்பதற்காகத் திமுக மீது வீண் பழி போடுவதையே முழுநேர வேலையாகக் கொண்டுள்ளது. இன்றைக்கு இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போது, அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் தவிக்கும் போது, எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவிகளை வாரி வழங்கினார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

