`விவசாயிகள் ஏற்றுமதியாளராக மாற வேண்டும்’ - மாம்பழங்களை மதிப்புக்கூட்ட வேலூர் கலெக்டர் வலியுறுத்தல்
``விவசாயிகளை உற்பத்தியாளரிலிருந்து ஒரு வியாபாரியாகவும், ஏற்றுமதியாளராகவும் கொண்டு போவதுதான் மாவட்ட நிர்வாகத்தின் விருப்பம். தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு, உங்களுடைய விவசாய நிலத்தில் செயல்படுத்துங்கள்.’’ - வேலூர் கலெக்டர் லீலா அலெக்ஸ்.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 5,924 ஹெக்டர் பரப்பளவில் `மா’ பயிர்ச் சாகுபடி செய்யப்படுகிறது. மகசூல் அதிகமான காலங்களில் விளைப் பொருள்களின் விலை ஏற்றத்தாழ்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், மா விவசாயிகளின் கோரிக்கைகளின்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகத்தின்கீழ் விரிஞ்சிபுரத்தில் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதிய ரகம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாம்பழத்தில் இருந்து மாம்பழப் பொடி தயாரிப்பு போன்றவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் செயல்முறையாக விளக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மா சந்தைக்கான மதிப்பு கூட்டுப் பொருள்கள், மதிப்பு கூட்டுதலுக்கு ஏற்ற மாம்பழங்களை தேர்வு செய்தல் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய கலெக்டர் லீலா அலெக்ஸ், ``வேலூர் மாவட்டத்தில் மாம்பழ உற்பத்தி மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் பற்றி விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் பேசியுள்ளோம். 50,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதை எப்படி முறையாக, லாபகரமானதாக மாற்றவும், அதற்கு உண்டான நடைமுறையை பற்றி அறிந்துகொள்ளவும் உங்களுக்கு ஒரு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு உற்பத்தியாளராக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஏற்றுமதி தரத்துக்குக் கொண்டு சென்று லாபகரமானதாக எப்படி மாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த விவசாயக் கூட்டங்களில் மாம்பழக் கூழ், மாம்பழப் பொடி, ஊறுகாய், ஜாம் போன்ற மதிப்பு கூட்டுப் பொருள்கள் பற்றி பேசியுள்ளோம்.



