புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை: மத்திய அமைச்சரிடம் மனு அளிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டத்துறை அமைச்சர் நமச்சிவாயம் டில்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்லை சந்தித்து, புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி கிளையினை விரைவில் அமைக்கக் கோரி மனு அளித்தார்.
இக் கோரிக்கையின் முக்கிய நோக்கம், புதுச்சேரி ஒன்றிய பிரதேச மக்களுக்கு குறைந்த செலவில், விரைவான மற்றும் எளிதான முறையில் நீதியை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகும். மேலும், புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி அமர்வு அமைக்கப்படுவதன் மூலம், இப்பகுதியின் சட்ட மற்றும் நீதித்துறை கட்டமைப்பு மேலும் வலுப்பெறும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வழக்குகளுக்காக நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை குறைந்து, திறமையான, விரைவான மற்றும் சிக்கனமான முறையில் நீதியைப் பெற முடியும் என, கோரிக்கை வைத்துள்ளார்.
மனுவினை பெற்றுக் கொண்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் புதுச்சேரி அரசின் கோரிக்கையை விரைவாக பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயத்திடம் உறுதி அளித்தார்.



