கோபனாரி பள்ளத்தில் அமைக்க திட்ட மதிப்பீடு தயார்புதிய மேம்பாலம்: பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை
மேட்டுப்பாளையம்: கோபனாரி பள்ளத்தில் புதிய மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த தோலம்பாளையம் அருகே கோபனாரி மலை கிராமம் உள்ளது. தமிழக-கேரளா எல்லை அருகே உள்ள இந்த கிராமத்தைச் சுற்றி பட்டிசாலை, சீங்குலி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர், காலனி புதூர், செங்குட்டை, மூனுக்குட்டை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் 1,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றன. அதே போல் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மன்னார்காடு, கோட்டத்துறை, அட்டப்பாடி, முக்காலி, மட்டத்துகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோபனாரி அருகில் வாழ்ந்து வருகின்றனர். உணவு பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இரு மாநில மக்களுக்கும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து தினமும் காய்கறிகள், வாழைத்தார்கள் என 200 முதல் 300 டன் வரை கோபனாரி எல்லை வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோபனாரி மற்றும் கேரளா பகுதியான மட்டத்துகாடு நடுவில் கொடுங்கரை பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் தான் இரு மாநில எல்லைகளையும் இணைக்கிறது. அனைத்து நாட்களிலும் இதில் தண்ணீர் செல்கிறது. இந்த பள்ளத்தில் சாலை வசதி இல்லை, மேம்பாலமும் இல்லை. பெரும்பாலும் குறைந்தளவு நீரே இப்பள்ளத்தில் செல்வதால், இரு மாநில மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்களும், வியாபாரிகளும், இப்பள்ளத்தை ஆபத்தான முறையில் வாகனங்கள் வாயிலாகவும், நடந்து சென்றும் கடக்கின்றனர்.



