விபத்தில் உயிரிழந்த என்ஐடி மாணவரின் உடலை மறு உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவு
ஒடிஸாவில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் என ஒப்படைக்கப்பட்ட சடலத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தந்தை தொடா்ந்த வழக்கில், மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் கோபாலகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் காா்த்திகேயன், ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் உள்ள என்ஐடி-இல் பி.டெக்., படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சாலை விபத்தில் எனது மகன் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் ஒடிஸா செல்வதற்குள், உடற்கூறு பரிசோதனையை முடித்து, எங்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து எனது மகனின் உடல் சொந்த ஊரான ஈரோடுக்கு எடுத்து வந்து, இறுதி காரியங்களுக்குப் பின், மாநகராட்சி மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனது மகனின் உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் உள்ளது.
அந்த அறிக்கையில், 19 வயது மூன்று மாதங்களான எனது மகனின் வயது 18 என குறிப்பிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மூலம் எனது மகனின் கடவாய் பற்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில்,அறிக்கையில் 32 பற்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புருவத்தில் இருந்த தழும்பு குறித்து அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை, என்பது உள்ளிட்ட முரண்பாடுகள் இருப்பதால், எனது மகனின் புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து மறு உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

