தில்லி பல்கலை. கல்லூரிகளுக்கு விடுதிகள் கோரி பொதுநல மனு: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
மேலும், இடைக்கால உத்தரவாக இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு வழக்குரைஞா்களிடம் ஏன் தேவையற்ற முறையில் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று கேள்வியெழுப்பியது. அந்த மனுவை புதன்கிழமை விசாரணைப் பட்டியலில் இடம்பெறும் வகையில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.


