கரூர் குடிநீர் திட்டத்தின் புதிய எம்.வி. எஸ்., பணி துவக்கம்
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் பயனடையும் வகையில் கரூர் குடிநீர் நியூ எம்.வி.எஸ். திட்ட விரிவாக்க பணிகள் சிவகங்கையில் இருந்து துவக்கப்பட்டுள்ளன. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக உள்ளதால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமலில் இருந்தாலும் கடைக்கோடி கிராமங்களுக்கு போதிய அழுத்தம் இல்லாததால் சீரான நீர் விநியோகம் கிடைக்கவில்லை. இதனை போக்க கூடுதல் குடிநீரை கொண்டு வரும் வகையில் நியூ எம்.வி.எஸ். திட்டத்தின் கீழ் கூடுதல் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. திருவாடானை பி.டி.ஓ. (ஊராட்சி) ஜெயமுருகன் கூறியதாவது:
மக்களின் தாகத்தை போக்க ராமநாதபுரம் கலெக்டர் இத்திட்ட பணிகளை மிகவும் தீவிரமாக கண்காணித்து எவ்வித தொய்வின்றி விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையிலிருந்து குழாய்கள் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. கலெக்டரின் அறிவுறுத்தல் படி இக்குழாய்கள் திருவாடானை, தொண்டி வழியாக முக்கிய விநியோக தொட்டிகளை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
வழியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சீரான அழுத்தத்தில் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்ய நவீன மோட்டார்கள் மற்றும் புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் இணைக்கப்பட உள்ளன. பிப்.,க்குள் அனைத்து கட்டப் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டமும் சேர்ந்தே செயல்படும் என்றார். அதிகாரிகளின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.