த.வெ.க. விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் ஐக்கியம்
திருப்பூர்: குண்டடம் பகுதி த.வெ.க. நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில், தாராபுரம் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளும் கட்சியான த.வெ.க. வில் இணைந்த சத்யபாமாவுக்கு தற்போது அக்கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்சி நிர்வாகிகள் மத்தியில் இரு விதமான கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அத்தொகுதிக்கு உட்பட்ட த.வெ.க.நிர்வாகிகள் சிலர் தங்கள் கட்சி பொறுப்புகளை உதறி விட்டு அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவ்வகையில் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், துணை செயலாளர் சிவபாலன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வப் பிரகாஷ், துணை அமைப்பாளர் பரணிபிரசாத் உள்ளிட்டோர் அக்கட்சி மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகினர். அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி முன்னிலையில், அனைவரும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமரன், செய்தி தொடர்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


