உலகளவிலான அடிமுறை போட்டியில்27 பதக்கங்களை பெற்று சாதனை
கள்ளக்குறிச்சி: கன்னியாகுமரியில் நடந்த முதல் உலகளவிலான அடிமுறை போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 27 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ., உள்விளையாட்டு அரங்கில் முதல் உலகளவிலான அடிமுறை போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு உலக அடிமுறை சம்மேளனத்தின் நிறுவுனர் செல்வராஜ், மலேசிய அடிமுறை சங்க தலைவர் தியாகு, அகில இந்திய சிலம்பம் சம்மேளத்தின் பொதுச்செயலாளர் ஐரின் செல்வராஜ் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பிரி சப்–ஜூனியர், சப்-ஜூனியர், ஜுனியர் மற்றும் சீனியர் என 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
சுவடு, கத்தி சுவடு, வாள் கேடயம், சுருள்வாள் கேடயம், கைப்போர், மல்லு, கட்டையான ஆயுதப் பெருக்கம், உயரமான ஆயுதப் பெருக்கம், சிரமக்கலைச் சண்டை மற்றும் கைச்சண்டை ஆகிய 10 வகையான தற்காப்பு கலைப்பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி அடிமுறை சங்கம் மற்றும் சூளாங்குறிச்சி இந்திய தற்காப்புக்கலை மற்றும் விளையாட்டு கலைக்கூடத்தைச் சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி 14 தங்கம், 11 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தமாக 27 பதக்கங்களை பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்றவர்களையும், இதற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் ஜெயபாலையும் பொதுமக்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.



