மூலப்பொருட்களுக்கு அதிக வரி ஜி.எஸ்.டி., யில் முரண்பாடுகள்
மதுரை: ‘மூலப்பொருட்களுக்கு அதிகமான வரியும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நிறைவு பொருட்களுக்கு குறைந்த வரியும் உள்ளது. ஜி.எஸ்.டி., வரியில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்’ என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மனு அளித்தனர்.
நிர்வாகிகள் வேல்சங்கர், கிஷோர், ஜெயப்பிரகாசம் கூறியதாவது: வரிவிலக்கு பொருட்கள் வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கும் கடை, தொழிற்சாலைகள், குடோன்கள் வாடகைக்கு ஆர்.சி.எம்., மூலம் ஜி.எஸ்.டி.,யில் இருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும். 2025 செப். 3ல் சலுகைகள் அறிவிக்கப்பட்ட போது உரம், பூச்சிக்கொல்லிகள் விடுபட்டன. தற்போது உரத்திற்கு 5 சதவீதம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 18 சதவீதம் என்று உள்ளதை 5 சதவீத வரியாக மாற்ற வேண்டும். களிமண் செங்கல்லுக்கு உள்ளீட்டு வரியுடன் 5 சதவீதம் என அறிவிக்க வேண்டும்.
அட்டைப்பெட்டி, பிரின்டிங், நோட்புக், தீப்பெட்டி தொழில்களுக்கான மூலப்பொருளான காகிதத்திற்கு 18 சதவீத வரியும் தயாரிப்பு பொருட்களுக்கு 5 சதவீத வரி என்று முரண்பாடாக உள்ளதை சமப்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளோம் என்றனர்.


