சிறு, குறு தொழில் உத்தரவாத கடன் திட்டம்: தமிழகம் பயனடைந்தது வெறும் 7% மட்டுமே
திருப்பூர்: சிறு, குறு தொழில்களுக்கான பிணையமில்லா உத்தரவாத கடன் திட்டத்தில், நாடு முழுதும் 3.05 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு வெறும் 7 சதவீதம் மட்டுமே என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்களுக்கு பிணையமில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தொழில் நஷ்டம் காரணமாக கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகையில் 75 முதல் 85 சதவீதம் வரை இத்திட்டத்தின் வாயிலாக வங்கிகளுக்கு ஈடுசெய்யப்படுகிறது.
தமிழக அரசு, மாநில தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு நிதியாக 70 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகம் அதிக நிதியை வழங்கியிருந்தாலும், வங்கிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இங்குள்ள நிறுவனங்களுக்கு எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை என தொழில்துறையினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


