போராட்டம் நடத்தி மிரட்ட நினைத்தால் தவெக அரசு ஒருபோதும் அடிபணியாது; அமைச்சர் விக்னேஷ் உறுதி
பொள்ளாச்சி: ''தவறு செய்தவர்கள், த.வெ.க., ஆட்சியில் நிச்சயம் தண்டிக்கப்படுவர்; போராட்டம் செய்து மிரட்ட நினைத்தால் இந்த அரசு அடிபணியாது,'' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அவர் அளித்த பேட்டி: முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியில், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பணம் வாங்கினால் 'சஸ்பெண்ட்' செய்யப் படுகின்றனர். ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கடை பராமரிப்பு, தீபாவளி போனஸ், பொங்கல் முன்பணம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மது பாட்டில்களை திரும்ப வாங்குவதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.
கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை. மற்ற பகுதிகளில் ஊழியர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றனர். தவறு செய்தவர்கள், நிச்சயம் தண்டிக்கப்படுவர். போராட்டம் செய்து மிரட்ட நினைத்தால், இந்த அரசு ஒரு போதும் அடிபணியாது. இவ்வாறு கூறினார்.



