இந்தியாவுக்கு திரும்புவதை திட்டமிட்டே தவிர்க்கவில்லை; சொல்கிறார் விஜய் மல்லையா
லண்டன்: இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதை தான் திட்டமிட்டே தவிர்க்கவில்லை என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2016ல் அவர் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கடந்த 2019 ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தான் வேண்டுமென்றே இந்தியாவுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவில்லை என்றும், தான் பிரிட்டனை விட்டு வெளியேற சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.


