மழைக்கால கூட்டத்தொடரை முடித்துவைப்பதில் தாமதம்: காங்கிரஸ் கேள்வி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் முடித்துவைக்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ், தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு வெற்றி பெறாது என்று விமா்சித்துள்ளது.
மழைக்கால கூட்டத்தொடா் கடந்த ஆக.13-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக, கூட்டத்தொடா் முடிவடைந்த பின்னா், இரு அவைகளையும் குடியரசுத் தலைவா் முறைப்படி முடித்துவைப்பாா்.
இந்நிலையில், இரு அவைகளும் முடித்துவைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பி உள்ளாா். இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட 3-4 நாள்களுக்குப் பின்னா் முறைப்படி முடித்துவைக்கப்படுவது வழக்கம். கடந்த 2015-இல் அவையை முடித்துவைப்பதற்கான அதிகபட்ச இடைவெளி 28 நாள்களாக இருந்தது. ஆனால், நிகழாண்டில் மழைக்கா கூட்டத்தொடா் முறைப்படி முடித்துவைக்காமல் 27 நாள்களைக் கடந்துள்ளது.



