ஊராட்சி மன்றம், கலெக்டரின் அதிகாரத்தை ரத்து செய்வதா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு
மதுரை: மதுரையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: இந்தியாவில் 1993ல் 73வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மூலம் வேளாண்மை, வேளாண்மை விரிவாக்கம், நிலப்பயன்பாடு, நில சீர்திருத்தம் உட்பட 29 துறைகளில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கான புன்செய் நிலத்தை மாற்றம் செய்வதற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநரிடம் இருந்தும், நன்செய் நிலத்தை மாற்றுவதற்கு கலெக்டரிடம் இருந்தும் தடையின்மை சான்று பெற வேண்டும் என தமிழக அரசு 2017ல் விதிகளை உருவாக்கியது. நிலத்தை மாற்றுவதற்கான மனுவை ஊராட்சி மன்றம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கிராம சபை தீர்மானங்களின் மூலம் ஊராட்சிக்கு எந்தமாதிரி தொழில்கள் வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. நன்செய் நிலங்களில் தொழிற்சாலை அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரின் தடையின்மை (என்.ஓ.சி.,) சான்று பெற வேண்டும் என தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக திட்டமிடுதல் சட்டம் 1971 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் பறிப்பு இந்த உரிமைகளை அரசாணை 149ன் மூலம் தமிழக அரசு ஜூலை 31ல் பறித்துள்ளது. இதன் படி புன்செய் நிலங்களை மாற்றம் செய்யும் அதிகாரத்தை டி.டி.சி.பி.,க்கு வழங்கியது. தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக திட்டமிடுதல் சட்டம் - 1971ஐ திருத்திய தமிழக அரசு, செப்.1ல் நன்செய் நிலத்தை மாற்றும் அதிகாரத்தை தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக இயக்குநருக்கு வழங்கியது.


