'மோடிக்காக கொண்டு வந்தேன்; உடைந்துவிட்டது'- பெல்ஜியம் பிரதமரின் உருகும் பரிசுப் பின்னணி
சர்வதேச உறவுகளில் உலகத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஆடம்பரப் பரிசுகளையும், அரிய கலைப்பொருட்களையும் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால், இந்தியாவிற்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதற்காக முற்றிலும் ஒரு விசித்திரமான மற்றும் உணர்வுபூர்வமான பரிசைத் தயார் செய்து கொண்டு வந்துள்ளார். அது வேறு ஒன்றுமல்ல, பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற உயர்தர சாக்லேட்டுகளால் அச்சு அசலாகச் செய்யப்பட்ட இந்தியா கேட் உருவச்சிலை தான்.
இந்தச் சாக்லேட் பரிசு துரதிர்ஷ்டவசமாகப் பயணத்தின் போது உடைந்துவிட்டாலும், அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு நூற்றாண்டு கால கூட்டு வரலாறும், உறைந்துபோன இந்திய வீரர்களின் தியாகமும் ஒட்டுமொத்த உலகையும் நெகிழச் செய்துள்ளது. இதுகுறித்து பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் ஊடகங்களிடம் பேசுகையில், "ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குச் சாக்லேட் ஒரு மிகச்சிறந்த ஆயுதம், ஆனால் அது நீண்ட தூர விமானப் பயணத்திற்குச் செட் ஆகாது என்பதை உணர்ந்து கொண்டேன். பிரதமர் மோடிக்காகச் செய்யப்பட்ட சாக்லேட் இந்தியா கேட் சிலை பயணத்தின் போது உடைந்துவிட்டது. ஆனால் கவலை வேண்டாம், இதற்கான மாற்றுச் சிலை பெல்ஜியத்தில் தயாராக உள்ளது, எப்படியாவது அதை முழுமையாகப் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பேன். நான் ஏன் இந்தியா கேட்டை தேர்ந்தெடுத்தேன் என்றால், அதன் பின்னால் இந்தியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையே நூறு ஆண்டுகளுக்கு முன்பு இரத்தம் மற்றும் தியாகத்தால் எழுதப்பட்ட ஒரு ஆழமான கூட்டு வரலாறு ஒளிந்திருக்கிறது.
முதலாம் உலகப் போரின் போது (1914-1918) பெல்ஜியத்தின் பிளாண்டர்ஸ் மற்றும் ஒய் ப்ரீஸ் போர்க்களங்களில் மண்ணோடு மண்ணாகப் புதைந்துபோன பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்களின் வீரத்தை நாங்கள் இன்னும் மறந்துவிடவில்லை என்பதை நினைவூட்டவே இந்த ஏற்பாடு" என்று உருகியுள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
