ஹேண்ட்பாலில் மண்டபம்முகாம் பள்ளி அணி சாம்பியன்
ராமநாதபுரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் போட்டிகளைத் துவக்கி வைத்தார். மாணவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதினர். முடிவில் மண்டபம் முகாம் பள்ளி முதலிடம் பெற்று ரூ.48 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றது. தொண்டி பள்ளி 2ம் இடமும், ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி 3ம் இடத்தையும் பிடித்தது. இதில், சிறப்பாக விளையாடிய 17 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டிகளில் நடுவர்களாக கார்த்திக், அருள் இனிக்கோ, சுரேஷ், மருதுசாமி, சிவகாட்சி பாலன், பிரசாத் ரூபன் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். சாதித்துள்ள மண்டபம் முகாம் பள்ளி மாணவர்களை தலைமையாசிரியர் அன்னை ஷீபா பிளவர் லெட், எஸ்.எம்.சி தலைவர் சம்பத்ராஜா, பி.டி.ஏ தலைவர் பூபதி, உடற்கல்வி இயக்குநர் தமிழரசு, உடற்கல்வி ஆசிரியர் இயேசு ராஜா, ஆசிரியர்கள் பாராட்டினர்.–––––

