மாசில்லா திண்டுக்கல் பகுதிக்கானது. :: பசுமைச் சோலையாக மாறிவரும் மாநகரம்
திண்டுக்கல்: நகர்புற காடு வளர்ப்பு திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியை பசுமையாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிகாரிகள், பணியாளர்கள், கடைநிலை ஊழியர்களின் ஒருங்கிணைந்த பணியால் திண்டுக்கல் மாநகர் பகுதியில் இதுவரை 4 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் நடப்பட்டு, தினசரி பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
தமிழக அரசின் நகர்ப்புற காடு வளர்ப்பு திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி நகரப் பகுதிகளைப் பசுமைச் சோலையாக மாற்றி வருகிறது. நகரத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது. மாநகராட்சி கமிஷ்னர், உயர் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள் என அனைத்து நிலை அதிகாரிகளும் நேரடியாகக் களத்தில் இறங்கி மரக்கன்றுகளை நட்டு , பராமரித்து வருகின்றனர். மாநகராட்சிக்குச் சொந்தமான காலி இடங்கள், மயானங்கள், சாலை ஓரங்கள், சென்டர் மீடியன்கள், ரவுண்டானாக்கள், முக்கியச் சந்திப்புகள், அரசு மருத்துவமனை வளாகங்கள் என நகரம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
நிழல், அதிக ஆக்சிஜன் தரும் புங்கை, வாகை, மகாகனி, கொன்றை, மருது போன்ற பல்வகை மரங்கள் நடப்படுகின்றன. அதிகப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரோட்டில் சென்டர் மீடியன், ரவுண்டானாக்களில் அரளிச் செடிகள் நடப்படுகின்றன. வாகனப் புகை, நகர்ப்புறக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க அரளி, மரக்கன்றுகள் பெரும் பங்காற்றுகின்றன. நட்டு வைத்த மரக்கன்றுகளைப் பாதுகாப்பதிலும் மாநகராட்சி நிர்வாகம் விழிப்புடன் செயல்படுகிறது. மரக்கன்றுகளை தொடர்ச்சியாக மண்டல வாரியாக பராமரிப்பாளர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநகராட்சி நுண் உரமாக்கல் மையத்தில் தயாரிக்கப்படும் மண்புழு உரங்கள், மண் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரசாயனங்கள் இன்றி இயற்கை உரம் பயன்படுத்தப் படுவதால், மரக்கன்றுகள் குறுகிய காலத்தில் செழிப்பாகவும் வளர்கின்றன.


