குண்டாறு, தெற்காறு சந்திப்பில் அணை கட்டி, மழைநீரை சேமிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
காரியாபட்டி:காரியாபட்டி பி.புதுப்பட்டி பகுதியில் குண்டாறு, தெற்காறு சந்திக்கும் இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளுக்கு குண்டாறு, தெற்காறு முக்கிய நீராதாரங்களாக உள்ளன. திருமங்கலம் அருகே பிரியும் தெற்காறு, பி.புதுப்பட்டி அருகே மீண்டும் குண்டாறுடன் இணைகிறது. மழைக்காலங்களில் இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பெருமளவு தண்ணீர் சேமிக்கப்படாமல் வெளியேறுகின்றன. பி.புதுப்பட்டி அருகே இரு ஆறுகளும் சந்திக்கும் பகுதியில் தடுப்பணை அமைத்தால் மழைக்கால நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் சுற்றுவட்டார கண்மாய்களுக்கு நீர்வரத்தை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வாய்ப்பு ஏற்படும். விவசாய கிணறுகளிலும் நீர் இருப்பு அதிகரித்து, மானாவாரி விவசாயம் செய்ய பயன்படும். மேலும், அப்பகுதியில் நீர்வரத்து முறையாக இல்லாததால் நல்ல மழை பெய்தாலும் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, குண்டாறு, தெற்காறு சந்திப்பு பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, நீர்வரத்து மற்றும் நில அமைப்புக்கு ஏற்ற வகையில் தடுப்பணை அமைக்க திட்டமிட வேண்டும். நீண்டகால கோரிக்கையான இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி விரைந்து பணிகளை தொடங்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
