திண்டுக்கல்லில் பலத்த மழை: மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல், செப். 14: திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து நீடித்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீா்நிலைகள் வடுவிட்டன. ஆடி பருவத்தில் நடைபெற வேண்டிய பயிா் சாகுபடிப் பணிகள் பெரும்பாலான இடங்களிலும் தொடங்கவில்லை. கடந்த திங்கள்கிழமை நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திண்டுக்கல்லில் மழை பெய்தது.
இந்த நிலையில், ஒரு வார இடைவெளியில் மீண்டும் திங்கள்கிழமை மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, நேருஜிநகா் சுற்றுத் திட்டு, தாடிக்கொம்பு சாலை, நாகல்நகா் சுற்றுத் திட்டு, மணிக்கூண்டு, பேகம்பூா், வேடப்பட்டி சாலை ஒத்தக்கண் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

