ஜவுளிக்கடைக்குள் புகுந்த சரக்கு வேன் டிரைவர் பலி
உசிலம்பட்டி: தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து காலையில் காய்கறிகள் ஏற்றி மதுரையில் இறக்கிவிட்டு, உரம், மருந்துபெட்டிகளை ஏற்றிக்கொண்டு தினசரி செல்லும் சரக்கு வேன் இயங்கி வருகிறது.
நேற்று கூடலுார் செந்தில் 35, என்பவர் வேனை ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைத் தாண்டி செட்டியபட்டி அருகே மதியம் 3:30 மணிக்கு சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோரத்தில் இருந்த வெங்கடேஷ் 36, என்பவரது ஜவுளிக் கடைக்குள் புகுந்து, அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இதில் கடை முன்பாக இருந்த டூவீலர்கள், சைக்கிள் உள்ளிட்டவை நொறுங்கின. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் செந்தில் இறந்தார். உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து செந்தில் உடலை மீட்டனர். ஜவுளிக்கடை உரிமையாளர் வெங்கடேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.



