ஜாதி பெயரில் தெரு பெயர் மாற்றத்தை கண்டித்து மக்கள் மறியல் போராட்டம்
திருச்சி : திருச்சி அருகே, ஜாதி பெயரில் தெரு பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை கிராம பஞ்.,சில், கிருஷ்ணசமுத்திரம் என்ற ஊர் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போது அதே ஊரில் கிருஷ்ணசமுத்திரம் மேல்பகுதி என்று பெயர் பலகை வைத்த நிலையில், அதே ஊரின் ஒரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, கிருஷ்ணசமுத்திரம் 'ஏடி' தெரு என்று பெயரிட்டு, வீட்டு வரி ரசீதுகள், பஞ்., நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே தங்கள் பகுதி கிருஷ்ணசமுத்திரம் ஏ.டி. தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது, அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை, அப்பகுதியினர், தங்களின் தெருவை பெயரை ஜாதியை வைத்து பிரித்துள்ளதாக கூறி, வீரப்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் நல்லாம்பிள்ளை கிராம பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

