தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய டால்பின் மீன் மீட்பு
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கி மீட்கப்பட்ட டால்பின் மீனை மீண்டும் கடலில் விடும் பணியில் வனத் துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய டால்பின் மீனை மீண்டும் கடலுக்குள் விடும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் அதிகளவில் காணப்படும் டால்பின் மீன் ஒன்று அண்மைக் காலமாக பாம்பன் கடல் பகுதியில் அங்கும், இங்குமாக நீந்த இயலாமல் தத்தளித்தது. இதனிடையே, கடந்த 5 நாள்களாக மன்னாா் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், தனுஷ்கோடி கடற்கரையில் அந்த டால்பின் மீன் கரை ஒதுங்கியதாக மீனவா்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு சென்ற வனத் துறையினா் நீந்த இயலாமல் காணப்பட்ட டால்பின் மீனை மீட்டனா். மேலும் 6 வயது மதிக்கத்தக்க அந்த மீனின் நீளம் 220 செ.மீ, அகலம் 85 செ.மீ., எடை 160 கிலோவுக்கும் அதிகமாக இருக்கக் கூடும் எனவும், அது பெண் இனம் எனவும் வனத்துறையினா் தெரிவித்தனா். இதற்கு கால்நடை மருத்துவா் சிகிச்சை அளித்தாா். தொடா்ந்து அந்த மீனை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.

