தூத்துக்குடி: இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம்; கற்பூரம் கொளுத்தி பஜனைப் பாடி வழிபட்டு வரும் ஊர் மக்கள்
தூத்துக்குடியில் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் ஆலயம், ரயில்வே நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், அரச மரத்தடியில் தினமும் மாலையில் கிராம மக்கள் பஜனைப் பாடியும், கற்பூரம் கொளுத்தியும் வழிபாட்டைத் தொடர்ந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி.லாசரஸ் நடத்தி வருகிறார்.
குரும்பூர் ரயில் நிலையம் எதிரில் இந்தச் சபை இயங்கி வருகிறது. இந்தச் சபைக்கு அருகில் ரயிலடி அருள்மிகு ஆனந்த விநாயகர் கோயில் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்தக் கோயில், தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட நிர்வாகத்தின் எல்கைக்குள் ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.



