100 நாளில் 904 ரெய்டு, விதி மீறிய 322 ஹோட்டல் மூடல்; தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு துக்காராம்
- நமது சிறப்பு நிருபர் -மும்பையில் உணவு பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பணி தொடங்கிய முதல் 100
மும்பையில் உணவு பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பணி தொடங்கிய முதல் 100 நாட்களில், 904 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, விதி மீறிய 457 பேரை கைது செய்துள்ளார்; 322 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ரூ.34 கோடி மதிப்பிலான கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்துள்ளார். தமிழகத்துக்கும் துக்காராம் போன்ற ஒரு அதிகாரி தேவை என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருபவர் துக்காராம் முண்டே. இவர் இந்த பொறுப்பை கடந்த மே 25ம் தேதி ஏற்றுக்கொண்டார். இன்றுடன் (செப் 08) அவர் இந்த பொறுப்புக்கு வந்து 106 நாள் ஆகிறது. துக்காராம் அதிரடி நடவடிக்கையால், ஒரு காலத்தில் மும்பையில் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட உணவகங்களில், இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரது செயல்பாட்டுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது. இதற்கு காரணம், ஐஏஎஸ் அதிகாரியாக தனது 21 ஆண்டுகால சேவையில் 25 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் நேர்மையுடனும் , கண்ணியத்துடன் பணியை எதற்கு அஞ்சாமல் துக்காராம் முண்டே மேற்கொண்டு வருவது தான்.

