அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற கர்நாடகா ஆர்வமாக உள்ளது: சிவகுமார்
பெங்களூரு: ''செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற கர்நாடகா ஆர்வமாக உள்ளது,'' என, முதல்வர் சிவகுமார் கூறினார்.
அமெரிக்காவின் 250வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் தலைமையில் விழா நடந்தது. இதில், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, பாரம்பரிய ஈடுபாட்டை தாண்டி வளர்க்கிறது. தொழில்நுட்பம், கல்வி, புத்தாக்கம், ஆராய்ச்சி, முதலீடு, கலாசாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும். வாஷிங்டனும், டில்லியும் நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மைக்கு வழிகாட்டலாம். ஆனால் பெங்களூரும், சிலிக்கான் பள்ளத்தாக்கும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப பரிமாணத்தை அளிக்கின்றன.


