7.5% உள் ஒதுக்கீடு : சாதனைப் பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு மருத்துவ சீட்!
ஒவ்வொரு ஆண்டும் சாதித்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இந்த ஆண்டும் சாதனையைக் கூடுதலாக்கி பள்ளியையும் ஊரையும் பெருமைப்பட வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2017ம் ஆண்டுக்கு முன்பு அதிக மதிப்பெண் பெற்ற 9 மாணவிகள் எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவர்களாக பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், நீட் தேர்வு வந்த பிறகு சிறு தேக்கமடைந்தது. அதனால் தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம் என்று பலமான கோரிக்கைகள் எழுந்தது. அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்பதால் 2020 ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியதுடன் அந்த மாணவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றது. தமிழ்நாடு அரசின் இந்த 7.5% ஒதுக்கீடு அறிவிப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதே ஆண்டில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் மருத்துவம் படிக்கச் சென்றனர். தொடர்ந்து கடந்த 2025 வரை 28 மாணவிகள் மருத்துவம் படிக்கச் சென்ற அரசுப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றது.
இந்த நிலையில் தான் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 13 ந் தேதி நடந்த முதல்கட்ட கலந்தாய்வில், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேவதர்ஷினி, மதனிகா, பிரியதர்ஷினி, தாணியா ஆகிய 4 மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கவும் பாரதி என்ற மாணவிக்கு பி.டிஎ.ஸ் படிக்கவும் என ஒரே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்குச் சீட்டு கிடைத்துள்ளது. மேலும் திரவியா என்ற மாணவிக்கு அவரது மதிப்பெண்ணோடு எம்.பி.பி.எஸ் சீட்டு முடிந்த நிலையில் பி.டி.எஸ் சீட்டு வேண்டாம் என்றவர் அடுத்து 2 ம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்து தனக்கு 2 ம் கட்ட கலந்தாய்வில் சீட்டு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
