ராமேஸ்வரம் கோவிலில் பணியிடங்கள் காலி அபிஷேக ஆராதனைகள் பாதிப்பு
சென்னை:பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அர்ச்சகர் மற்றும் கைங்கர்ய பணியிடங்களை நிரப்புவதில், அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காலதாமதம் செய்வது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், புகழ்பெற்ற ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ராவண வதத்திற்கு பின், ஸ்ரீ ராமர் சிவபெருமானை வழிபட்டு, தன் பாவங்களை போக்கிக் கொண்ட இடம்.
இக்கோவிலில் கடந்த 15 ஆண்டுகளாக, போதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படாததால், அபிஷேக ஆராதனைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. போதிய அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டி தொடரப்பட்ட வழக்கில், 'அர்ச்சகர்களை நியமிக்கலாம்' என, கடந்த ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


