50 வருடங்களாக தொடரும் சர்ச்சை.. சர்க்காரியா ஆணையம் என்றால் என்ன? இறுதியில் அது என்ன ஆனது?
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட இந்த ஆணையம் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சர்க்காரியா கமிஷன் விசாரணை பற்றி காலம் காலமாக பேசப்பட்டுவரும் நிலையில், அது எதற்காக அமைக்கப்பட்டது? இறுதியில் என்ன ஆனது என்று விரிவாக பார்க்கலாம்.
திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரமும் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் இணைந்து அப்போதைய குடியரசுத் தலைவர் விவி கிரியை சந்தித்து திமுக அரசின் ஊழல்கள் என 32 பக்கங்கள் நிரம்பிய புகார் பட்டியலை அளித்தனர். அந்தப் புகார் பட்டியல் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பப்பட, அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்.

