பிரசவித்த பெண் உயிரிழப்பு :மருத்துவமனை மீது புகார்
தண்டையார்பேட்டை: பிரசவித்த சில மணி நேரத்தில், பிரியா, 30, என்ற பெண் உயிரிழந்ததற்கு, தனியார் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என, உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விஜய ஆனந்த். இவரது மனைவி பிரியா, 30; நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்திற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலை - வண்ணாரப்பேட்டையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இரவு, சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. சில மணிநேரத்தில், ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரியா உயிரிழந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பெண்ணின் உயிரிழப்பிற்கு தனியார் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என, நேற்று காலை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
