குழந்தைகளை கடத்துபவா்களுக்கு 15 நாள்களில் தண்டனை வழங்க வேண்டும்: முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்
குழந்தைகளை கடத்துபவா்களுக்கு 15 நாள்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினாா்.
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: மனித குலத்தின் ஆணிவேரையே அழிக்கும் வகையில் குழந்தைத் திருட்டு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திருடப்படும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றனா். மேலும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தப்படும் அவல நிலை காணப்படுகிறது.
12 முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனா். பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைகள், திருவிழாக்களில் கடத்தப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டுவரை மாயமான குழந்தைகளில் சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.


